
திருப்பூர் அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடாததால், மருத்துவமனை ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
முகக்கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக தடுப்பூசி தட்டுப்பாடு இருந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூ மாவட்டத்துக்கு இரண்டாம் தவனையாக நேற்று முன்தினம் 9,200 தடுப்பூசிகள் வந்துள்ளது. இந்த தவலறிந்த பொதுமக்கள் நேற்று திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
தடுப்பூசி குறைந்த அளவே இருந்ததால் அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.