கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 இலட்சத்திற்கான வங்கி வைப்புத் தொகை | மதுரை கலெக்டர் வழங்கினார்
Bank deposit of Rs 10 lakh for children who lost their parents due to corona | Presented by Madurai Collector

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (30.05.2022) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்த 17 குழந்தைகளுக்கு பாரத பிரதமர் அவர்களின் ”PM Care” நிதியின் கீழ், ரூபாய் 10 இலட்சத்திற்கான வங்கி வைப்புத் தொகை ஆணை, ”PM Care” சான்றிதழ் மற்றும் PMJ ஹெல்த் கார்டு ஆகியவற்றை வழங்கினார்.
கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள், சட்டப்பூர்வ பாதுகாவலர் / தத்து பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு ”PM Care” நிதி மூலம் ஆதரவளிக்கப்படும் என மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் அறிவித்தார்கள்.
குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி மற்றும் உதவித்தொகை மூலம் அவர்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களுக்கு தன்னிறைவு அளிப்பதற்காக 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் முதலியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
அதன்படி, 10 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ குழந்தைக்குச் சேர்க்கை வழங்கப்படும். குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால், கல்வி உரிமைச் சட்டத்தின்படி பிஎம் கேர்ஸில் இருந்து கட்டணம் செலுத்தப்படும். சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கான செலவையும் பிஎம் கேர்ஸ் ஏற்கும்.
11-18 வயதுடைய குழந்தைகளுக்கு சைனிக் பள்ளி, நவோதயா பள்ளி போன்ற உண்டி-உறைவிட மத்திய அரசுப் பள்ளிகளில் குழந்தைக்குச் சேர்க்கை வழங்கப்படும். குழந்தை ஒரு வேளை பாதுகாவலர்/ தாத்தா-பாட்டி /உறவினரின் பராமரிப்பில் இருந்தால், அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ சேர்க்கை வழங்கப்படும்.
குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால், கல்வி உரிமைச் சட்டத்தின்படி பிஎம் கேர்ஸில் இருந்து கட்டணம் செலுத்தப்படும். சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கான செலவையும் பிஎம் கேர்ஸ் ஏற்கும்.
மேலும், இக்குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது பயன்படும் வகையில் ரூபாய் 10 இலட்சம் வைப்புத் தொகையை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பிஎம் கேர்ஸ் அளிக்கும்.
இந்தத் தொகை 18 வயதில் இருந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு உயர் கல்வியின் போது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான உதவித்தொகையை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும்.
மேலும், ரூபாய் 5 இலட்சம் மருத்துவக் காப்பீட்டுடன் கூடிய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் (பிஎம்-ஜே) பயனாளிகளாக அனைத்துக் குழந்தைகளும் சேர்க்கப்படுவர்.
குழந்தைகளுக்கு 18 வயதாகும் வரை பிரீமியம் தொகையை பிஎம் கேர்ஸ் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்துள்ள 17 குழந்தைகளுக்கு இன்றைய தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரத பிரதமர் அவர்களின் ”PM Care” நிதியின் கீழ், ரூபாய் 10 இலட்சத்திற்கான வங்கி வைப்புத் தொகை ஆணை, ”PM Care” சான்றிதழ் மற்றும் PMJ ஹெல்த் கார்டு ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஆர்.சுந்தர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.