தெருக்கள்மதுரை

கிழக்கு கோபுரம் உச்சியில் இருந்து விழுந்தவர் யார் என்று தெரியுமா ? ஏன் என்று தெரியுமா ? தெரு பெயர் ஆய்வு – 06

Madurai Street Name - Madurai History

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் புகழ் பெற்றது என்ற பெருமை அனைவரும் தெரிந்த ஒன்று. அதற்கு முக்கிய காரணம் வானளாவி உயர்ந்து நிற்கும் நான்கு கோபுரங்கள்தான். அப்படிப்பட்ட கோபுரங்களை கீழிருந்து பார்ப்பதே மிகப்பெரிய வரம். அப்படியிருக்க அந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று கீழே பார்த்தால் எப்படி இருக்கும். ஆம்… மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தின் உச்சியில் நின்று மதுரையை ரசிக்கும் வாய்ப்பு அன்றைய மதுரை வாசிகளுக்கு கிடைத்துள்ளது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அதற்கு காரணம் என்ன  என்று தெரிந்து கொள்ளும் முன் கிழக்கு கோபுரம் குறித்து சில முக்கிய தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம்.

நான்கு வெளிக் கோபுரங்கிளில் இதுவே மிகப் பழமையானது. இது 163 அடி உயரம் உடைய கோபுரம் ஆகும். கி.பி.1216 முதல் 1238 வரை அரசாட்சி செலுத்திய மாறவர்மன் சுந்தரபாண்டியனால் இக்கோபுரம் கட்டப்பட்டது. ஆயினும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1273) கட்டி முடித்தான் என்பர் சிலர். சுந்தரபாண்டியன் கோபுரம் என்ற பெயரும் இதற்கு உண்டு. நான்கு கோபுரங்களில் உயரத்தில் மூன்றாவது இடம் பெறும் இக்கோபுரத்தில் 1011 கதையுருவங்கள் உள்ளன. கிழக்கு கோபுரம் மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு பின்வரும் காரணம் கூறப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிபுரியும் முதலிமார் குடும்பங்களுக்கு இறையிலியாக நிலங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலங்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. அரசி மங்கம்மாளுக்குப் பின் ஆட்சிக்கு வந்த சொக்கநாத நாயக்கர் இந்நிலங்களுக்கு வரி விதிக்க முற்பட்டார். இதனைக் கோயில் திருப்பணியாளர்கள் எதிர்த்தனர். கிழக்கு கோபுரத்திற்கு அருகே எதிர்ப்பாளர்கள் யாவரும் ஒன்று கூடியபோது சொக்க முதலி என்பவர் கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏறினார்.

ஒருவரும் எதிர்பாராத நிலையில் அங்கிருந்து கீழே குதித்து உயிர் துறந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அரசன் இறையிலி நிலங்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தைக் கைவிட்டான். அன்று முதல் கீழக் கோபுரம் வழியாக செல்ல மக்கள் அஞ்சினர். சொக்கர் சந்நதி வழியாகச் செல்வதற்கு பதில் மீனாட்சி சந்நதி வழியாகச் செல்லும் புதிய பழக்கத்தை மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இச்சம்பவம் கீழக்கோபுரச் சுவரிலுள்ள கல்வெட்டு ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Share Now
Back to top button
error: