தெருக்கள்மதுரை

கிழக்கு கோபுரமும், தெற்கு கோபுரமும் – 04

Madurai Street 04

சுவாமி சன்னதிக்கு நேர் எதிரே கிழக்காடி வீதியை சார்ந்து அமைந்துள்ள கிழக்கு வாசலின் மேலே அமைக்கப்பெற்றுள்ள கோபுரம் கிழக்கு கோபுரம் ஆகும். நான்கு வெளிக் கோபுரங்களில் இதுவே மிகப் பழமையானது, கி.பி. 1216 முதல் 1238 வரை அரசாட்சி செலுத்திய மாறவர்மன் சுந்தரபாண்டியனால் இக்கோபுரம் கட்டப்பட்டது.

ஆயினும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1273) கட்டி முடித்தான் என்பவர் சிலர். சுந்தரபாண்டியன் கோபுரம் என்ற பெயரும் இதற்கு உண்டு. நான்கு கோபுரங்களில் உயரத்தில் மூன்றாவது இடம் பெறும் இக்கோபுரம் 49.3 மீட்டர் உயரம் உள்ளது. இக்கோபுரத்தில் 1011 சுதையுருவங்கள் உள்ளன. கிழக்கு கோபுரம் மக்களால் பெரிதும் பயன்படுத்தபடுவதில்லை. அதற்குப் பின்வரும் காரணம் கூறப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணி புரியும் முதலிமார் குடும்பங்களுக்கு இறையிலியாக கொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலங்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. அரசி மங்கம்மாளுக்கு பின் ஆட்சிக்கு வந்த சொக்கநாத நாயக்கர் இந்நிலங்களுக்கு வரி விதிக்க முற்பட்டார். அதனைக் கோயில் திருப்பணியாளர்கள் எதிர்த்தனர். கிழக்கு கோபுரத்திற்கு அருகே எதிர்ப்பாளர்கள் யாவரும் ஒன்று கூடியபோது சொக்க முதலி என்பவர் கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏறினார்.

ஒருவரும் எதிர்பாராத நிலையில் அங்கிருந்து கீழே குதித்து உயிர் துறந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அரசன் இறையிலி நிலங்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட்டான். அன்று முதல் கிழக்கு கோபுரம் வழியாக செல்ல மக்கள் அஞ்சினர். சொக்கர் சன்னதி வழியாக செல்வதற்கு பதில் மீனாட்சி சன்னதி வழியாக செல்லும் புதிய பழக்கத்தை மக்கள் கடைபிடிக்க தொடங்கினர். இச்சம்பவம் கிழக்கு கோபுரச் சுவரிலுள்ள கல்வெட்டு ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கோபுரம்

நான்கு கோபுரங்களில் இதுவே மிக உயரமானது. 52 மீட்டர் உயரமான இந்த கோபுரத்தில்தான் புராணக்கதைகளை விளக்கும் சுதை சிற்பக காட்சிகள் அதிகம் உள்ளன. இக்கோபுரம் கட்டி முடிக்கும்போது இச்சிற்பங்கள் அமைக்கப்படவில்லை என்னும் பின்னரே இவை அமைக்கப்பட்டன என்றும் 1798ஆம் ஆண்டு கல்வெட்டு கூறுகிறது. இதில் 1511 சுதை உருவங் கள் உள்ளன. கி.பி. 1539 இல் இக்கோபுரம் திருச்சி நகரைச் சேர்ந்த சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டி என்பவரால் கட்டப்பட்டது. இக்கோபுரத்தின் உட்பகுதியிலுள்ள படிக் கட்டு கள் வழியே கோபுரத்தின் உச்சிக்கு சென்றால் அங்கிருந்து மதுரை நகரின் அழகைக் காணலாம்.

வேறு கோபுரங்கள்

மீனாட்சி கோயிலில் 12 கோபுரங்கள் உண்டு என்று கண்டோம் நான்கு வெளிக் கோபுரங்கள் தவிர சுவாமி சன்னதியில் 5 சிறிய கோபுரங்களும் அம்மன் சன்னதியில் 3 சிறிய கோபுரங்களும் உள்ளன. அவை பற்றிய விபரம்:

1) சன்னதிக் கோபுரம் (கிழக்கு)
மாறவர்மன் குலசேகரன் (1168-1175) கி.பி. 1168 இல் இதைக் கட்டினார். இதன் உயரம் 12.5 மீட்டர் அனைத்து கோபுரங்களிலும் இதுவே காலத்தால் முந்தியது.

2) நாயக்கர் கோபுரம் (கிழக்கு)
வசுவப்பன் என்பவர் கி.பி. 1372இல் கட்டினார்.இதன் உயரம் 20.1 மீட்டர்.

3) முக்குறுணி விநாயகர் கோபுரம் (தெற்கு)
திருச்சி சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியாரால் கி.பி 1559இல் கட்டப்பட்டது. இதன் உயரம் 21 மீட்டர் நடுகாட்டு கோபுரம் என்பது இதன் மற்றொரு பெயர்.

4) பலகக் கோபுரம் (மேற்கு)
இதனைக் கட்டியவர் மல்லப்பன் 22 மீட்டர் உயரமுள்ள இக்கோபுரம் கி.பி. 1374 இல் கட்டப்பட்டது.

5) சின்ன மொட்டை கோபுரம் (வடக்கு)
செவ்வந்தி மூர்த்தி செட்டியாரின் மகன் வேலப்பச் செட்டியாரால் கி.பி. 1560 இல் கட்டப்பட்ட இக்கோபுரத்தின் உயரம் 21.5 மீட்டர், செவ்வந்தி மூர்த்தி செட்டியாரின் மற்றொரு மகன் திருவம்பல செட்டியார் ஊஞ்சல் மண்டபத்தை 1562 இல் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நான்கு கோபுரங்களின் தெருக்கள் மற்றும் இதர கோபுரங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். இனி அடுத்த பதிவில் பாக்கியிருக்கும் அம்மன் சன்னதிக் கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகள் பற்றி ஒரு பார்வை பார்ப்போம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

டி. தேவராஜ்

மதுரை எழுத்தாளர்கள் பட்டியலில் முக்கியமாக அறிய வேண்டிய நபர்களில் டி.தேவராஜ் அவர்களும் ஒருவர். மிகச் சிறந்த நூல்களை படைத்துள்ளார். மதுரை குறித்து பல நூல்களை வெளியிட்டிருந்தாலும், மதுரை நகர தெருப் பெயர்கள் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள இவரது நூல் மதுரைக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த நூலின் தொகுப்பினைத்தான் நாம் இங்கு பார்க்கின்றோம். இவர் பசுமலை உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Back to top button
error: