கிருதுமால் கால்வாயில் தொடர்ந்து தவறி விழும் கால்நடைகள் | குழந்தைகள் தவறி விழுவதற்கு முன் மதில் சுவர் எழுப்ப பொதுமக்கள் கோரிக்கை
Cattle keep falling into Kritumal canal Public demand to build a wall before children slip and fall

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கிருதுமால் நதியானது பைபாஸ் சாலை எல்லிஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செல்கிறது. இதில் பல இடங்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் நிலவுவதால், அடிக்கடி கால்நடைகள் தவறி விழுவது தொடர் கதையாகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எல்லிஸ் நகர் மற்றும் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாயில் கால்நடைகள் தவறி விழுவதும், அதை மீட்பதற்கு தீயணைப்புத் துறை செல்வதும் வழக்கமாகவே நடந்து கொண்டிருக்கிறது.
இதனை தடுக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம், கால்வாயில் மதில் சுவரை உயர்த்தி கால்நடையோ அல்லது மனிதர்களோ தவறி விழுகாத அளவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை எல்லலீஸ் நகர் பகுதி கால்வாயில் பசு மாடு ஒன்று தவறி விழுந்தது. உடனடியாக அப்பகுதி மக்களும், மாட்டின் உரிமையாளரும் கால்வாயில் விழுந்த பசுவை மீட்பதற்கு நீண்ட நேரம் முயற்சித்தும் முடியவில்லை.
உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி பசுமாட்டினை மீட்டு எடுத்தனர்.
கடந்த வாரத்தில் மட்டும் தீயணைப்புத் துறையினால் மூன்று மாடுகள் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இனி இது போல் எந்தவித கால்நடையோ, மனிதர்களோ அதில் தவறி விழாத அளவிற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
கால்நடைக்கு பதிலாக சிறு குழந்தை விழுந்து உயிர் சேதம் ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதில் சுவர் எழுப்பி உயிர் சேதத்தை தவிர்ப்பது நல்லது.