சினிமாவீடியோ

காகித ஓடம் கடல் அலைபோலே தொலைபேசியில் பாடல் வரிகள் கூறிய கலைஞர்

Dr.Karunanidhi 🎞 தமிழ் சினிமா 360

தமிழ் சினிமா நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். கலைஞரை எதிர்கட்சியினருக்கும் பிடிக்கும் என்றால் அதற்கு ஒரே காரணம் அவரது தமிழ் பேச்சுதான். கலைஞரின் பேச்சுக்காக அன்றைக்கு பல மைல் நடந்து வந்து இரவு முழுவதும் கேட்டு ரசித்த ரசிகர்கள் ஏராளம். சினிமாவில் கதை வசனம் எழுதுவதில் கலைஞருக்கு நிகர் கலைஞரே. பன்முக ஆற்றல் படைத்த திமுக தலைவர் கலைஞரின் சதூர்யமான செயல்களை இந்த வீடியோவில் பார்ப்போம்.

1967-ல் திமுகவுக்கு தேர்தல் செலவு களுக்காக ரூ.10 லட்சம் நிதி திரட்ட வேண்டும் என்று அண்ணா இலக்கு வைத்தி ருந்தார். அவர் நிர்ணயித்ததைவிட ஒரு லட்சம் ரூபாய் அதிகமாகவே வசூலித்து விட்டார் அப்போது திமுகவின் பொருளா ளராக இருந்த கருணாநிதி. சென்னையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் நிதியாக அண்ணாவிடம் ரூ.11 லட்சத்தை அளித்தார். பின்னர், தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு கூட்டம் நடந்தது. அதில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் கருணாநிதியை, ‘மிஸ்டர் பதினோரு லட்சம்’ என்று பெருமிதம் பொங்க அறிவித்தார் அண்ணா.

சட்டப்பேரவையில் மாற்றுக்கட்சியினர் எழுப்பும் சிக்கலான எந்த கேள்விக்கும் தனக்கே உரிய முறையில் நகைச்சுவை யுடனும், சாதுர்யத்துடனும் பதில் அளிப்பார் கருணாநிதி. ஆக்ரோஷமாக எழுந்து கேள்வி கேட்டவரே ரசிக்கும்படி பதில் அளிக்கும் ஆற்றல் கருணாநிதிக்கு உண்டு.

1970-களில் அவர் முதல்வராக இருந்த போது சட்டப்பேரவையில் ஒரு விவாதம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் மசோதாவை ஆதரித்து கருணாநிதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்க் கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர் டி.என்.அனந்தநாயகி, ‘‘எதற்காக இந்த சட்டம்? எங்கள் ஊரில் உள்ள பிடாரி கோயிலில் தாழ்த்தப்பட்டவர்தான் பூசாரியாக இருக்கிறார். எனவே, இந்த சட்டம் தேவையில்லை’’ என்றார்.

அதற்கு, மசோதாவின் நோக்கத்தை விளக்கிய கருணாநிதி, ‘‘தாழ்த்தப்பட்டவர் கள் அர்ச்சகராக இருப்பதை பிடாரிகள் கூட ஏற்கிறார்கள். சில அடங்காப் பிடாரிகள் ஏற்க மறுக்கிறார்கள்’’ என்று கூற, அவையே சிரிப்பில் ஆழ்ந்தது.

விடாமல் அடுத்த கேள்வி தொடுத்தார் அனந்தநாயகி. ‘‘சாமி நம்பிக்கை இல்லாத முதல்வர் கருணாநிதிக்கு, கோயிலைப் பற்றி என்ன கவலை?’’ என்றார். அசராத கருணாநிதி, ‘‘கொலை செய்தவர்கள் மட்டுமா நீதிமன்றம் போகிறார்கள். வழக்கில் வாதாடும் வக்கீல்களும், நீதிபதிகளும் கூடத் தான் நீதிமன்றம் போகிறார்கள்’’ என்றார். கேள்வி கேட்ட அனந்தநாயகி உட்பட சபையே அவரது சாதுர்யத்தை ரசித்தது.

கருணாநிதி கதை, வசனத்தில் முரசொலி மாறன் தயாரித்து, இயக்கிய படம் ‘ ?’. அந்தப் படத்தில் இடம்பெற்ற மறக்க முடியாத பாடல்.. டி.கே.ராமமூர்த்தியின் இசையில் பி.சுசீலா வின் சோகம் இழையும் குரலில் வரும் ‘காகித ஓடம் கடல் அலைமீது போவது போலே மூவரும் போவோம்’ என்ற பாடல். இப் பாடலை எழுதியவர் கருணாநிதிதான் என்பது பலருக்கு தெரியாது ஒன்று.

அவராக விரும்பி, இந்தப் பாடலை எழுதவில்லை. எழுத வேண்டிய சூழ்நிலை. முதலில் கவிஞர் மாயவநாதன்தான் பாடலை எழுத இருந்தார். இந்தப் பாட்டுக்கு இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி ஏற்கெனவே மெட்டு அமைத்துவிட்டார். வழக்கமாக, ‘தானன தானா.. தானன தானா’ என்றுதான் இசையமைப்பாளர்கள் பாடிக் காட்டுவார்கள். அன்று உற்சாக மனநிலையில் இருந்த டி.கே.ராமமூர்த்தி, ‘தானன தானா..’ என்பதுபோல கவிஞரின் பெயரையே ‘மாயவ.. நாதன்.. மாயவ.. நாதன்’ என்று பாடிக் காட்டினார். டி.கே.ராமமூர்த்தி விளையாட்டாகதான் இதை செய்தார். ஆனால், கவிஞர் மாயவநாதன், ‘‘என்ன கிண்டல் செய்கிறீர்களா’’ என்று கேட்டுவிட்டு கோபமாக எழுந்துபோய் விட்டார்.

பாடல் எழுதப்பட்டு காட்சி படமாக்கப் பட வேண்டும். அவசரமாக தொலைபேசியில் கருணாநிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த அரைமணி நேரத்தில் தொலைபேசி வழியாகவே அவர் கொடுத்த பாடல்தான்.. ‘காகித ஓடம் கடல்அலை மீது’. பாட்டின் தொடக்கம் முதல் கடைசி வரை ‘மாயவ..நாதன்.. மாயவ..நாதன்’ என்பதுபோலவே எழுதியிப்பார் கருணாநிதி.

இந்த பாட்டு உருவானதில் மட்டுமல்ல, ஒலிப்பதிவிலும் ஒரு சுவாரசியம் இருக்கிறது. ‘புதிய பறவை’ படத்தில் சூப்பர் ஹிட்டான ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி 64 வயலின்களை அந்தப் பாடலுக்கு பயன்படுத்தியிருந்தனர். வயலின் கூட்டத்தின் இசை அந்தப் பாடலை ஆக்கிரமித்திருக்கும்.

பின்னர், விஸ்வநாதனும், ராமமூர்த்தி யும் பிரிந்துவிட்ட நிலையில், ‘மறக்க முடியுமா’ படத்துக்கு டி.கே.ராமமூர்த்தி மட்டும் இசையமைத்தார். படத் தயாரிப்பாளர் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன். ‘எங்கே நிம்மதி’ பாடல் போல, ‘காகித ஓடம்’ பாடலும் சிறப்பாக வரவேண்டும் என்பதால், இந்தப் பாடல் ஒலிப்பதிவிலும் 64 வயலின்கள் வேண்டும் என்று கேட்டார் ராமமூர்த்தி.

சிக்கனத்துக்கு பெயர்பெற்ற கருணாநிதி சிரித்துக்கொண்டே ராமமூர்த்தியிடம், ‘‘அப்போது விஸ்வநாதன் ராமமூர்த்தி இரண்டு பேரும் சேர்ந்து 64 வயலின் பயன்படுத்தினீர்கள். இப்போது ராமமூர்த்தி மட்டும்தானே. 32 வயலின் போதுமே’’ என்றார். டைமிங் காமெடி என்றபோதிலும் அதில் கற்கண்டு சுவை ஒலிந்திருப்பது கலைஞருக்கே உண்டான பன்முகத்திறன். நன்றி வணக்கம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: