களிமண் பொம்மைகளில் பழவிதைகள், நாட்டு மர விதைகள் | மதுரை சமூக ஆர்வலர் க.அசோக்குமார் புதிய முயற்சி
Fruit seeds in clay doll, native tree seeds | Madurai social activist K. Ashokumar's new initiative

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் க.அசோக்குமார், மரக் கன்றுகள் நடுதல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது குழந்தைகள் விளையாடும் களிமண் பொம்மைகளில் விதைகள் நிரப்பி செய்துவருகிறார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் தெரிவிக்கையில், நமது பாரம்பரியத்தில் நாம் சிறு வயதில் களிமண்களில் பலவிதமான பொம்மைகள் செய்து விளையாடியுள்ளோம்.
தற்போது காலங்கள் மாறிவிட்டன. இன்றைய நவீன காலத்தில் மண்பாண்டங்களால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்களில் இளையதலைமுறை விளையாடுவது அரிதாகிவிட்டது.
களிமண்ணுக்கு பதிலாக குழந்தைகள் க்ளே என்னும் நவின பொருள்களில் விளையாடுகின்றனர். பெற்றோர்களும் அதைதான் தங்களது குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர்.
இந்த க்ளே எனும் பொருளில் கெமிக்கல் கலந்துள்ளது. விளையாடிய குழந்தைகள் கைகளை நன்றாக கழுவாமல் உணவை சாப்பிட்டால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது. மேலும், பள்ளிக்கு projects செய்வது கூட இந்த க்ளே தான் இன்றைக்கு பயன்படுத்தப்படுகிறது.
சிறுவயதில் நாம் களிமண்ணால் சமையல் பாத்திரங்கள் செய்து இலைகளையும், மண்களையும் கொண்டு சோறாக்கி விளையாடுவோம், ஆனால் தற்போது கிச்சன் செட் என்றழைக்க கூடிய பொருட்கள் கொண்டு குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர்.
ஆதலால் குழந்தைகளுக்கு தற்போது நான் செய்துள்ள சொப்பு சாமான்களில் பழவிதைகள், நாட்டு மர விதைகள் வைத்து செய்துள்ளேன். இதனை குழந்தைகள் விளையாடி உடைந்த பிறகு, தூக்கி வீசும் பட்சத்தில் விதை முளைத்து செடிகள், மரங்கள் உருவாகிட வாய்ப்பு உள்ளது. முளைத்தால் மரம் இல்லையேல் மண்ணுக்கு உரம்.
சொப்பு சாமான்களை துணிப்பையில் வைத்தே கொடுத்து வருகின்றேன். இதன் மூலம் துணிப்பை பயன்பாடு மற்றும் மரங்கள் மற்றும் இயற்கை சார்ந்து விழிப்புணர்வினை ஏற்படுத்திட முடியும் என்றார்.
ஆதலால் உங்கள் குழந்தைகளுக்கு விதையால் செய்யப்பட்ட களிமண் விளையாட்டு பொம்மைகள் வேண்டுமென்றால் சமூக ஆர்வலர் க.அசோக்குமார் 9171870007 தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு வாங்கி மண்ணுக்கும் மனிதனுக்கும் பயனுற்று வாழ வழி வகை செய்யலாம். இவரது இந்த செயலுக்கு ஹலோ மதுரை சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.