
தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, சென்னையில் நடைபெற்ற விழாவில் விவசாயிகள் நலனுக்காக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தித்தினை (23.05.2022) தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தெ.மேட்டுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் மதுரை மாவட்ட அளவில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தித்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகள் நலனை பாதுகாத்திடும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
வேளாண் பணிகள் மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலனை உறுதி செய்திடும் நோக்கில் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டு சுமார் ரூபாய் 33 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து மாநில வேளாண் மேம்பாட்டு திட்டம், சிறுதானிய சிறப்பு மண்டலம் உருவாக்கம் என பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் சென்னையில் நடைபெற்ற விழாவில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தித்தின் கீழ் மாநில அளவில் 1,997 ஊராட்சிகளில் ரூபாய் 227 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்கள்.
அதனடிப்படையில், மதுரை மாவட்டத்தில் இன்றைய தினம் 58 ஊராட்சிகளில் ரூபாய் 61.50 இலட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு வேளாண் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, தென்னங்கன்றுகள், வரப்பு பயிர்களாக பயிரிட உளுந்து விதை தொகுப்பு, விசை தெளிப்பான், கை தெளிப்பான் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான நமது அரசு விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் இத்தகைய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
முன்னதாக, இவ்விழாவில் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்க விழா காணொளி காட்சி வாயிலாக பிரம்மாண்ட மின்னணு திரையில் திரையிடப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், நபார்டு நிதி உதவியுடன் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் பாலமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேகரிப்பு கிட்டங்கியை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பஞ்சு, பேரூராட்சி தலைவர்கள்ரேணுகா ஈஸ்வரி (அலங்காநல்லூர்), பால்பாண்டி (வாடிப்பட்டி) உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.