
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டாரத்திலுள்ள யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 02.07.2022-அன்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக வட்டார அளவிலான ”இளைஞர் திறன் திருவிழா” வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்களைக் கொண்டு காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில் கிராமப்புறங்களை சேர்ந்த 18 முதல் 35 வயது வரையுள்ள (8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை) இருபால் இளைஞர்களும் கலந்து கொள்ளலாம். திறன் பயிற்சி முடித்து வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் தொடங்கி பயன்பெற வாய்ப்பு உள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.
மேலும், பல்வேறு அரசு துறை / திட்டங்களான தீனதயாள் உபத்யா கிராமின் கௌசல் போஜனா, ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகத்தின் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றி தொடர்புடைய அலுவலர்களால் பயனுள்ள கருத்துக்களையும், வழிக்காட்டுதல்களையும் வழங்கப்பட உள்ளது.
தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, கணினி சில்லறை விற்பனை வணிகம், துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல், நான்கு சக்கர பழுது நீக்குதல், உதவி செவிலியர், அழகு கலை பயிற்சி, சணல் பை தயாரித்தல், போட்டோ கிராபிக் மற்றும் வீடியோ கிராபிக், ஆட்டோமேட்டிக் சர்வீஸ் டெக்னீஷியன், பீல்டு டெக்னீஷியன் மற்றும் கார்டுவேர்ஸ் போன்ற பல்வேறு பயிற்சிகள் கொடுப்பதற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
இப்பயிற்சி முற்றிலும் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அறிய வாய்ப்பினை இருபால் இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், முகாமிற்கு வருகை தரும் இளைஞர்கள் அசல் மற்றும் நகல் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அடையாள அட்டை மற்றும் புகைப்படங்களுடன் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், விபரங்களுக்கு, வட்டார இயக்க மேலாளர், ஊரக வாழ்வாதார இயக்கம், மதுரை கிழக்கு ஒன்றியம் மற்றும் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுநத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை-14 என்ற முகவரிக்கு தொடர்பு கொணடு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.