செய்திகள்

ஊரடங்கு மேலும்‌ ஒருவாரம்‌ நீட்டிப்பு தமிழக முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிவிப்பு

Tamil Nadu Chief Minister MK Stalin announces one more week extension of lockdown

ஊரடங்கு மேலும் ஒருவாரம் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்காக, மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில்‌ 25-3-2020 முதல்‌ தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்கீழ்‌, ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன்‌ அமலில்‌ இருந்து வருகிறது.

இந்நிலையில்‌, கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக்‌ கட்சித்‌ தலைவர்களுடன்‌ நடத்திய ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌, சட்டமன்றக்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ தெரிவித்த கருத்துகளின்‌ அடிப்படையிலும்‌, முன்னதாக மருத்துவ வல்லுநர்கள்‌ மற்றும்‌ மக்கள்‌ பிரதிநிதிகளின்‌ கருத்துகளைக்‌ கேட்டறிந்தும்‌, ஆலோசனை மற்றும்‌ கருத்துகளைப்‌ பரிசீலித்தும்‌, கொரோனா பெருந்தொற்று நோய்ப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல்‌ தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு வரும்‌ 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும்‌ நிலையில்‌, நோய்த்‌ தொற்றின்‌ தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும்‌, நோய்த்‌ தொற்று பரவாமல்‌ தடுத்து, மக்களின்‌ விலைமதிப்பற்ற உயிர்களைக்‌ காக்கும்‌ நோக்கத்திலும்‌, இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும்‌ ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்‌.

எனினும்‌, பொதுமக்கள்‌ அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும்‌ நோக்கத்தில்‌, அனைத்து மாவட்டங்களிலும்‌ நடைமுறையில்‌ இருந்துவரும்‌ நடமாடும்‌ காய்கறி / பழங்கள்‌ விற்பனை தொடர்புடைய துறைகள்‌ மூலம்‌ தொடர்ந்து நடைபெறும்‌. மேலும்‌, மளிகைப்‌ பொருட்களை அந்தந்தப்‌ பகுதிகளில்‌ உள்ள மளிகைக்‌ கடைகளால்‌ வாகனங்கள்‌ அல்லது தள்ளுவண்டிகள்‌ மூலம்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ அனுமதியுடன்‌, குடியிருப்புப்‌ பகுதிகளுக்குச்‌ சென்று விற்பனை செய்யவும்‌, ஆன்லைன்‌ மற்றும்‌ தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்‌ கோரும்‌ பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும்‌ காலை 7-00 மணி முதல்‌ மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர, பொது மக்களின்‌ சிரமத்தை குறைக்கும்‌ வகையில்‌, 13 மளிகைப்‌ பொருட்கள்‌ அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌, வரும்‌ ஜூன்‌ மாதம்‌ முதல்‌ வழங்கிட, கூட்டுறவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்‌.

கொரோனா நோய்த்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்த, பொது மக்களின்‌ நலன்‌ கருதி தமிழ்நாட்டில்‌ முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்‌, பொது மக்கள்‌ அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில்‌ வருவதையும்‌ கூட்டங்களையும்‌ தவிர்க்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.

மேலும்‌, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில்‌ குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில்‌ முகக்‌ கவசம்‌ அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்வது ஆகியவற்றை கட்டாயம்‌ பின்பற்றவும்‌, நோய்த்தொற்று அறிகுறிகள்‌ தென்பட்டவுடன்‌, பொதுமக்கள்‌ உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை /
சிகிச்சை பெறவும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. மக்கள்‌ அனைவரும்‌ அரசின்‌ முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: