
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, மதுரையிலுள்ள வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியினை சிறப்பாக செய்வதற்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு மதுரை மாவட்டத்திலுள்ள வக்ஃப் நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும், தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும், 18 வயதிலிருந்து 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (LLR) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும், கல்வி தகுதி தேவை இல்லை.
மேலும், மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 110 வக்ஃப் நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் 1.பேஷ் இமாம், 2.அரபி ஆசிரியர்கள், 3.மோதினார் 4.முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் மானியத் தொகை வழங்கப்படும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமான சான்று, புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, சாதி சான்று, ஓட்டுநர் உரிமம் / LLR வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்புகண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் /விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
மேலும், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்கத் தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.