
மதுரை மாவட்டம். சிந்தாமணி மற்றும் பனையூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரிசி ஆலைகளில் (17.05.2022) மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் நேரடியாக சென்று, இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக தயார் நிலையில் உள்ள அரிசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 29.04.2022 அன்று சட்டமன்றத்தில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக ரூ.80 கோடி மதிப்பீட்டில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பீட்டில் மருந்து பொருட்கள், ரூ.28 கோடி மதிப்பீட்டில் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, இலங்கைக்கு அனுப்பி வைத்திட ஏதுவாக மதுரை மாவட்டத்தில் உள்ள அரிசிஅரவை ஆலைகளிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்து 1,000 மெட்ரிக் டன் அளவில் தரமான சன்ன ரக புழுங்கல் அரிசி அனுப்பி வைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக மதுரையில் உள்ள 12 அரிசி ஆலைகளிலிருந்து அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் அரிசி 10 கிலோ பைகளாக தயார் செய்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக துணை ஆட்சியர் / வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் இந்திரவள்ளி உடன் இருந்தார்.