கட்டுரைகள்மதுரை

இலக்கியப் பதிவுகளில் மதுரை ஓர் பார்வை

Madurai History articles

தமிழகத்தின் தலைநகரம் சென்னை என்றால் தமிழின் தலைநகரம் மதுரை. இதைக் சொன்னவர் தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள். சங்க இலக்கியத்தில் பாடுபொருளாகவும், பாடுவோர் வாழுமிடம் மதுரையாகவும் இருந்துள்ளது. இருந்து வருகின்றது.

பழங்கால இலக்கியத்தில் மட்டுமல்ல இன்றைக்கும் பாடுபொருளாக மதுரை உள்ளது. மதுரை பற்றி பல கவிதைகள் நான் எழுதி உள்ளேன். எனவே இந்தக் கட்டுரையில் என்னுடைய படைப்புகளை மேற்கோள் காட்டிட விரும்புகின்றேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த மண் பற்று இருக்கும். ஆனால் மதுரைக்காரர்களுக்கு பிறந்த மண் பற்று கூடுதலாகவே இருக்கும். ‘பாசக்கார பசங்க’ என்று மதுரை இளைஞர்களை அழைப்பதும் உண்டு. நம்பியவர்களுக்கு உயிரைத் தரவும் தயங்க மாட்டார்கள் மதுரைக்காரர்கள்.

நான் பிறந்த ஊர் மதுரை என்பதால், எனக்கு மதுரை மீது மட்டற்ற அன்பு உண்டு. மதுரை மீதுள்ள பற்றின் காரணமாக வேறு ஊரில் கிடைக்க இருந்த பதவி உயர்வையும் வேண்டாம் என்று மறுத்தவன். சென்னை, பெங்களூர், மைசூர், ஹைதராபாத் என்று எத்தனையோ ஊர்களுக்கு சென்று இருக்கிறேன். ஆனால் மதுரையைப் போல எந்த ஊரும் இருப்பதில்லை. எப்படா? மதுரை வருவோம் என்ற மனநிலையே இருக்கும்.

உலகத்திலேயே இப்படி திட்டமிட்டு சதுரம் சதுரமாக வடிவமைக்கப்பட்ட ஊரை பார்க்க முடியாது. உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் திருக்கோயிலைச் சுற்றி கோவிலுக்கு உள்ளே சதுரமாக ஆடி வீதி, கோவிலுக்கு அருகே சித்திரை வீதி, அதன் அருகே மாசி வீதி, அதன் அருகே வெளி வீதி என அனைத்து வீதிகளும் சதுரம் சதுரமாகவே இருக்கும். பண்டைக் காலத்தில் எப்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டதோ அதே வடிவிலேயே இன்றும் சதுரம் சதுரமாக தொடர்வது வியப்பாக உள்ளது.

சிலப்பதிகாரத்தில் மதுரையில் பகல் கடை, இரவுக் கடை என இருந்ததாக வரும். இன்று, மதுரையில் இரவுக் கடைகள் உண்டு. மதுரையில் யானைக்கல் பகுதி மற்றும் மாட்டுத்தாவணி போன்ற இடங்களில் பல தேநீர் கடைகளுக்கு கதவே இருக்காது. பூட்டாமல் 24 மணி நேரமும் வியாபாரம் நடக்கும். தற்போது தான் காவல் துறையினர் இரவு நேரங்களில் தேநீர் கடைகளை மூடி விட அறிவுறுத்தி உள்ளனர்.

மதுரையில் சுடச்சுட இட்லியும், பலவகை சட்னியும், சாம்பாரும், சுவையான, சூடான வெண்பொங்கல் என அனைத்தும் இரவு நேரங்களில் கிடைக்கும். சிலப்பதிகாரம் காலத்தில் தொடங்கப்பட்ட இரவு வியாபாரம் இன்றும் மதுரையில் தொடர்வது வியப்பான ஒன்று.

தமிழ்த்திரைப்படங்களில் காட்டுவது போல, மதுரையில் அரிவாள் கலாச்சாரம் இல்லவே இல்லை. திரைப்படம் ஓட வேண்டும் என்பதற்காக இயக்குனர்கள் வன்முறை நகரமாக போலியாக சித்தரித்து வருகின்றனர்.

இங்கு பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வந்த அனைவரும் மதுரையையும், மதுரை மக்களையும் பாராட்டி செல்கின்றனர். ‘வந்தாரை வரவேற்கும் மதுரை’ என்பது முற்றிலும் உண்மை. மனிதநேயத்துடன் உதவிடும் உள்ளம் பெற்றவர்கள் மதுரைக்காரர்கள்.

சென்னையில் பெருமழை வெள்ளம் வந்த போது, மதுரையிலிருந்து பொருட்களை லாரிகளில் ஏற்றிச்சென்று, உதவிய உயர்ந்த உள்ளம் பெற்றவர்கள் மதுரைக்காரர்கள்.

ஒரு திரைப்படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? என்பதை முடிவு செய்வதும் மதுரை தான். மதுரையில் ஒரு திரைப்படம் ஓடினால், வேறு நகரங்களிலும் ஓடும் என்பது உண்மை. அதனால் தான் திரைப்படத்துறையினர் மதுரையின் வரவேற்பை உற்றுநோக்கி வருகிறார்கள்.

எந்த ஓர் அரசியல் கட்சியும் பெரிய மாநாடுகள் நடத்திட தேர்வு செய்வது மதுரையைத் தான். காரணம், மதுரை மக்கள் சகிப்புத் தன்மை மிக்கவர்கள். யார் வந்து மாநாடுகள் நடத்தினாலும் அவர்களை வெறுக்காமல் அன்பு செலுத்துபவர்கள் மதுரை மக்கள்.

“மதுரையைச் சுற்றிய கழுதை கூட மதுரையை விட்டு வெளியே செல்லாது” என்று பழமொழி உண்டு. இது முற்றிலும் உண்மை. கழுதைகளே மதுரையை விட்டுச் செல்ல விரும்பாத போது, மனிதர்கள் மதுரையை விட்டுச் செல்ல விரும்புவதில்லை.

மதுரையில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் மக்களும் உள்ளனர். வடநாடுகளிலிருந்து இங்கு வந்து வீடுகள் வாங்கி, கடைகள் வைத்து பலர் வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு மதத்தவர், பல்வெறு சாதியினரும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

ஜைன மதக் கோயில் கூட இங்கு உண்டு. மதுரையில் ஆத்திகமும் உண்டு, நாத்திகமும் உண்டு. ஆனால் மோதல்கள் இல்லை, வேற்றுமையில் ஒற்றுமை என்பது மதுரைக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்.

இந்து, இஸ்லாமியர், கிறித்தவர் என பல்வேறு மதத்தவரின் திருவிழாக்களும் மதுரையில் கோலாகலமாக நடக்கும். சகிப்புத்தன்மைக்கு மிகவும் பெயர் பெற்றவர்கள் மதுரைக்காரர்கள். ஓரிரு இடங்களில் நடந்த சிறு மோதல்களை வைத்து ஒட்டுமொத்த மதுரையே மோதல் நகரம் என்ற பிம்பத்தை திரைப்படத்தில் போலியாக உருவாக்கி உள்ளனர் என்பதே உண்மை. மதுரையை பண்பாளர்களின் இருப்பிடம் என்றால் மிகையன்று. அநீதி யாருக்கும் நடந்தால் தட்டிக் கேட்கும் துணிவு மட்டும் உண்டு.

மதுரையின் சிறப்புகள் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவிலைப் போன்று கலைநயம் மிக்க பிரமாண்ட சிலைகள் உலகில் வேறு எந்தக் கோவிலிலும் காண முடியாது. பிரமாண்ட தூண்கள் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனை.

இந்த அரண்மனை கட்டுவதற்காக மண் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கு எடுக்கப்பட்ட பிரமாண்ட பிள்ளையார் சிலை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளது. மண் எடுத்த பள்ளத்தையே மாரியம்மன் தெப்பக்குளமாக வடிவமைத்த திருமலை மன்னரின் அறிவுத்திறன் நினைக்க வியப்பாக உள்ளது.

மதுரையில் இன்றும் கைத்தறி நெசவு நடைபெற்று வருகின்றது. மதுரை வரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் ஆச்சரியமாக கேட்டு அறிந்து நெசவு நெய்யும் இல்லத்திற்கு சென்று பார்த்து வருகின்றனர். கைவினைப் பொருட்களும், மதுரையில் செய்து வருகின்றனர்.

மதுரை விளாச்சேரி பகுதியில் செய்யப்படும் பொம்மைகள் தான் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள கடைகளில் இருக்கின்றன. பழங்காலம் தொடங்கி இன்று வரை தொன்மை மாறாத நகரமாகவும், அதே நேரத்தில் புதுமைக்கும் புதுமையாக பல்வேறு மால்களும் மதுரையில் உள்ளன.

மதுரையில் 4 நட்சத்திர உயர்தர விடுதிகளும் உண்டு. சாதாரண விடுதிகளும் உண்டு. இன்றைக்கும் ஒரு இட்லி 2 ரூபாய்க்கும், வடை 50 பைசாவுக்கும் விற்கும் கடைகள் உண்டு. மதுரையில் ஒரு நாளைக்கு பல ஆயிரம் கொடுத்தும் தங்கலாம். ஒரு நூரு ரூபாயிலும் மூன்று வேளை வயிறார சாப்பிடலாம். பணக்காரர்கள், நடுத்தர மக்கள், அடித்தட்டு ஏழை மக்கள் என அனைவரும் வாழ வழியுள்ள நகரம் மதுரை.

உண்வு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கிடைக்கும் அற்புத நகரம் மதுரை. கலை, பண்பாடு, மொழி அனைத்திலும் சிறந்து விளங்கும் மதுரை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்து வரும் மதுரை. இன்றும் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

தமிழ் அறிஞர்கள், பட்டிமன்ற நடுவர்கள் அனைவருமே மதுரையிலேயே வாழ்கிறார்கள். தமிழறிஞர் இரா. இளங்குமரனார், தற்போது மதுரையில் தான் வாழ்ந்து வந்து தமிழ் வளர்த்து வருகிறார். தமிழறிஞர் சாலமன் பாப்பையா, தமிழ்த்தேனீ இரா.மோகன், கலைமாமணி கு.ஞானசம்மந்தன், நகைச்சுவை மன்னர் இளசை சுந்தரம் போன்ற பட்டிமன்ற நடுவர்கள், மதுரையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் உலகம் முழுவதும் பயணித்தும், தொலைக்காட்சிகளில் பேசியும் தமிழ் வளர்த்து வருகிறார்கள். பல்வேறு கவிஞர்கள் மதுரையில் வாழ்ந்து வருகின்றனர். கவிதைமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் தலைமையின் கீழ் 50 கவிஞர்கள் கவிதை பாடி வருகிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மிகவும் பழமை வாய்ந்த கடம்பமரம் இன்றும் உள்ளது. இராணி மங்கம்மாள் வாழ்ந்த அரண்மனையில் காந்தி அருங்காட்சியகம் உள்ளது. அங்கு கோட்சே, காந்தியைச் சுட்ட போது, காந்தியடிகள் அணிந்து இருந்த ரத்தக்கறை படிந்த துணி அசல் உள்ளது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டு வீடு, அதாவது திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை மதுரையில் உள்ளன. அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவில் முத்திரை பதிக்கும். விஷ்ணு கோயில், சிவன் கோயில் என்று பல்வேறு கோயில்கள் மதுரையில் உள்ளன. மதுரைக்கு கோயில் நகரம், கூடல் நகரம், கடம்பவனம் என்று பல்வேறு பெயர்கள் உண்டு.

மதுரை பற்றி சிந்தித்தால் கவிதை என்பது அருவியாக வந்து கொட்டும். மதுரையை மனதார நேசிப்பவன் நான். பேராசிரியர்கள் பலர் இலக்கியங்களை ஆராய்ந்து கட்டுரை வடிப்பார்கள். ஆனால் நான் ஒரு படைப்பாளி. இதுவரை 15 நூல்கள் எழுதி உள்ளேன். என்னுடைய நூல்களில் மதுரை பற்றிய கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இணையங்களிலும் மதுரை பற்றிய கவிதைகள் எழுதி வருகிறேன்.

வலைப்பூ, முகநூல் இப்படி நவீன வடிவங்களில் மதுரை பற்றிய கவிதை எழுதி உள்ளேன். என்னுடைய முகநூலில் ஒரு நபருக்கு அதிகபட்சமான நண்பர்கள் உள்ளனர். 5000 நபர்கள் பின்தொடர்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் மதுரைக்காரகள், மதுரை பற்றி நான் எழுதிய கவிதைகளை படித்து விட்டு பாராட்டி உள்ளனர்.

பல்வேறு பெருமைகளைக் கொண்ட மதுரை, குறிப்பாக காந்தியடிகள் அரையாடை தத்துவத்திற்கு, கொள்கைக்கு, கோட்பாட்டிற்கு மாறிய ஊர் மதுரை. மதுரை மேலமாசி வீதியில் அரையாடை அணிந்த இல்லம் இன்றும் உள்ளது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகள் பலர் வாழ்ந்த ஊர், வாழும் ஊர் மதுரை. அணுகுண்டு அய்யாவு என்ற விடுதலை போராட்ட வீரர், அவரது தம்பி செல்லையா அவர்களும் விடுதலைப் போராட்ட வீரர்.

விடுதலைப் போராட்ட வீரர்கள் சங்கத் தலைவராக இருந்தவர் என்னுடைய தாத்தா ஆவார். என்னுடைய அம்மாவின் தந்தை இவர். என்னை வளர்த்தவர் .மண்ணை விட்டு மறைந்தாலும், மனதை விட்டு மறையாத மாண்பாளர்கள் வாழ்ந்த பெருமைமிகு பூமி மதுரை. இந்த உலகில் மதுரைக்கு இணையான ஊர் மதுரை மட்டும் தான். உலகின் முதல் நகரம் மதுரை என்று நிறுவிடும் காலம் விரைவில் வரும்.

கவிஞர் இரா.இரவி

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now
Back to top button
error: