
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில், 108 வைணவ ஸ்தலங்களில் மிகப்புண்ணியமானதாக கருதப்படும் ஸ்ரீஆண்டாள் கோவில் உள்ளது. ஸ்ரீஆண்டாள் கோவில் தினந்தோறும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தாலும், அனைத்து திருவிழாக்களுக்கும் சிகரமாக இருப்பது ஆடிப்பூரம் தேரோட்டம் திருவிழா தான்.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. 2 ஆண்டுகளுக்குப்பின் இந்த ஆண்டு ஆடிப்பூரம் திருவிழா வழக்கம் போல கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. கடந்த மாதம் 24ம் தேதி ஆடிப்பூரம் திருவிழாவிற்காக, ஸ்ரீஆண்டாள் கோவிலில் கொடியேற்றப்பட்டது. தினமும் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் ஊர்வலம் வந்தனர்.
மேலும் கோவிலில் ஆடிப்பூரம் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆடிப்பூரம் விழாவின் சிகரமான, ஆடிப்பூரம் தேரோட்டம் இன்று காலை துவங்கியது. முன்னதாக திருத்தேரில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள் அம்பாளுக்கு, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கமன்னார் கோவிலிலிருந்தும், மதுரை கள்ளழகர் கோவில் ஸ்ரீசுந்தரராஜப்பெருமாள் கோவிலிலிருந்தும் வழங்கப்பட்ட மங்களப் பொருட்கள், வஸ்திரங்கள், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷமிட்டு பரவசத்துடன் தேரிழுத்தனர். தேருக்கு முன்பாக ஸ்ரீஆண்டாள் பக்தி பாமாலை குழுவினர் வண்ணமயமான கோலாட்டம் ஆடியபடி, ஆண்டாள் தேருக்கு முன்பாக நடனமாடிச் சென்றனர்.
2 ஆண்டுகளுக்கு பின்பு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுவதால் விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆடிப்பூரம் தேரோட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் கோவில் பகுதி மட்டுமல்லாமல், திருவில்லிபுத்தூர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேரோட்டத்தை முன்னிட்டு ரதவீதிகள் மற்றும் முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மகிழ்ச்சியுடன், உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.