
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி பகுதியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில், தனியார் நிலத்தில் வாடகைக்கு திறந்தவெளியில் நெல் சேமிப்பு கிட்டங்கி அமைந்துள்ளது.
இங்கு ஐந்து ஏக்கர் பரப்பளவில் நெல் மூடைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையில், நெல் மூடைகள் மழை நீரில் நனைந்து புல் முளைத்து சேதம் ஆகி வருகின்றன. இதனை பாதுகாக்கும் வகையில் விரைவில், வரும் ஆண்டில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் புதிய கட்டிடம் அமைத்து மாற்றப்பட்ட உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு அதிகாரிகள் புதிய கட்டிடம் குறித்து தெரிவித்தாலும், விவசாயிகளின் வியர்வையில் உருவான நெல்கள் உரிய பாதுகாப்பு இல்லாது, மழை நீரில் நனைந்து புல் முளைத்திருக்கும் அவலம் அனைவருக்கும் வேதனை அளிக்கிறது. அரசின் மெத்தனப் போக்கினை இது காட்டுவதாகவும், மழை காலம் வரும் என்று தெரிந்திருந்தும், வந்தபின் இதுபோல் அதிகாரிகளின் ஆய்வு கண்ணில் மண் தூவும் விதமாக உள்ளது என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேபோல், மதுரை கீழக்குயில்குடியிலிருந்து, மேலக்குயில் குடி வழியாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியிலும் திறந்த வெளியில் நெல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. அதன் நிலைமையும் இப்படித்தான் ஆகியிருக்க கூடும் என்றும், அதற்கும் விரைவில் ஒரு மாற்று இடம் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நெல் மூட்டைகளை அடுக்கிவைக்க கூட, ஒரு இடத்தைஅமைத்து, அதை பாதுகாக்க முடியாத தமிழக அரசு எப்படி, பொது மக்கைள பாதுகாக்கும் என எதிர் கட்சிகள் சுட்டிகாட்டியுள்ளனர். இதற்கு தகுந்த பதிலையும், நெல் மூட்டைகளை உனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே சரியான தீர்வாக அமையும்.