தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை நாம் தொடர்ந்து பார்க்கப் போகின்றோம். அதில் முதலாவதாக அவர் வளர்த்த யானைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
தனது மகள் சாந்தி ஆசைப்பட்டார் என்ற காரணத்திற்காக ஒரு யானைக் குட்டியை வாங்கி வளர்த்து வந்தார் சிவாஜி. தனது மகளின் பெயரையே இந்த யானைக்கு சூட்டி வளர்த்து வந்த சிவாஜி பின்னர் அது வளர்ந்ததும் 1964ம் ஆண்டு திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு தானமாக அளித்தார். அன்று முதல் யானை அங்கு வளர்ந்து வந்தது.
அந்த யானையை பராமரிக்க முடியாத நிலையில் கோவில் நிர்வாகம் சிவாஜியிடம் எங்கள் கோவில் வருமானத்தில் யானைக்கு தீனி போட முடியவில்லை வேறு கோவிலுக்கு யானையை கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.
அதற்கு நடிகர் திலகம் நாளை நான் இதற்கான பதிலை கூறுகின்றேன் என்று சொல்லி அவர்களை அனுப்பியுள்ளார். ஒரு வாரம் வரை பதில் வராத காரணத்தால் கோவில் நிர்வாகம் மீண்டும் நடிகர் திலகத்தை காண சென்ற போது, அவர் சொன்ன வார்த்தை நிர்வாகத்திற்கு அதிர்ச்சி அளித்தது.
அது என்னவென்றால் கோவிலுக்கு அருகே இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும், அந்த விளை நிலத்தில் பயிர் செய்து வரும் வருமானத்தில் கோவிலுக்கும் யானைக்கும், யானைப் பாகனுக்கும் விவசாயிக்கும் கொடுக்க ஏற்பாடு செய்து உள்ளதாகவும், யானைப் பாகனுக்கும், விவசாயிக்கும் வீடு ஒன்று அமைத்துத் தருவதாகவும் கூறி, அவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
இந்த நிலையில் வயோதிகம் காரணமாக யானைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. யானையின் வவது கண் பார்வையை பறிபோன நிலையில், 2010 ஆண்டு ஜூலை 15ந் தேதி இறந்துவிட்டது. இதனால் பக்தர்கள் கவலையும், சோகமும் அடைந்தனர். மக்கள் பெரும் கூட்டமாக திரண்டு வந்து யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.
யானை சாந்தி இறந்த தகவல் அறிந்ததும், சிவாஜி கணேசனின் பேத்தி விஜயலட்சுமி தனது குடும்பத்தினருடன் வந்து யானைக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் யானையின் உடலை கிரேன் மூலம் தூக்கிச் சென்று கோவில் வளாகத்திற்குட்பட்ட பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
ஏற்கனே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அன்று சொன்னதுபோல், கோவிலுக்கு அருகில் உள்ள இரு ஏக்கர் நிலங்களும், அதன் வருமானமும், கோவில் யானை பராமரிப்பு செலவுக்கு இன்று வரை நடந்துக் கொண்டு இருக்கிறது. இது போல் கோவில்களுக்கு ஆறு யானை வாங்கிக் கொடுத்து உள்ளார் நடிகர் திலகம் என்ற தகவலுடன் நாளை வேறு ஒரு சினிமா பதிவில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறுவது தமிழ் சினிமா ரசிகன். நன்றி வணக்கம்.