ஆபத்தான நிலையில் வாடிப்பட்டி அங்கன்வாடி மையம் | புதிதாக கட்டித்தர கோரிக்கை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் சார்ந்த இவ்வூரில் குழந்தைகள் பயில கடந்த 2017/18ல் கடந்த ஆட்சியில் ஊருக்கு வெளிய வயல்வெளியில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
அந்த அங்கன்வாடி மையம் கட்டப்பட்ட விவசாய நிலம் சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில், ஊருக்குள் பெய்யும் மழை தண்ணீர் அனைத்தும் அங்கன்வாடி முழுவதும் சேகரமாகி விடுகிறது. இதனால், கட்டிடம் முழுவதும் தரையில் மூழ்கும் அபாயம் இருந்து வருகிறது.
எந்நேரமும் பூமிக்குள் புகும் அபாயமும் இருப்பதாக பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, தங்களது குழந்தைகளை இந்த அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பயமாக உள்ளது.
மாற்று இடத்தில் தகுந்த பாதுகாப்புடன் குழந்தைகளுக்கு உரிய வகையில் புதிய அங்கன்வாடி மையம் கட்டி தரும் பட்சத்தில் தாங்கள் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.
இதனால், தற்காலிகமாக ஊராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதனால், ஊரில் நடைபெறும் திருமணம் காதணி விழா மற்ற வைபவங்களுக்கு இடம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
அரசு உடனடியாக தலையிட்டு, அங்கன்வாடி மையத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.