
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு இன்று (23.07.22) அருள் பாலித்தார்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகையின் போது தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையோடு எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் கார்த்திகை விமர்சையாக கொண்டாடப்படும்.
இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு, காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் சன்னதி தெருவில் உள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் முருகப்பெருமான் தெய்வானையோடு எழுந்தருளினார்.
அங்கு மாலை வரை இருக்கும் சுவாமி மாலையில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றுது. அதன் பின்பு சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். தொடர்ந்து இரவு திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி, கீழ ரத வீதி ஆகிய முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்தது.