பறவை இனங்களில் மிக பெரிய பறவை நெருப்புக்கோழி என்றபோதும் இதனால் பறக்க முடியாது. இதற்கு தீக் கோழி என்றும், ஆங்கிலத்தில் Ostrich என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதற்கு ஏன் நெருப்புக் கோழி என்று ஏன் பெயர் வந்தது என்ற காரணம் தெரியுமா ?
இதன் இறகுகள் கடுமையான வெப்பத்தை தாங்கும் சக்தி பெற்றதால், நெருப்பு போன்ற கடுமையான வெப்பம் நிறைந்த பகுதியிலும் வாழத் தகுதியான கோழி வகை என்பதால் இதற்கு நெருப்புக் கோழி என்று பெயர் வந்தது.
எல்லா கோழி இனங்கள் போன்று, ஆண் நெருப்புக்கோழியை ‘ரூஸ்டர்’ என்றும், பெண் நெருப்புக்கோழியை ‘ஹென்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆண் நெருப்புக்கோழி கருப்பு நிறத்திலும் பெண் நெருப்புக்கோழி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
நெருப்புக்கோழிக்கு நீண்ட கழுத்தும், கால்களும் உண்டு. இவைதான் மற்ற கோழி இனங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
சுமார் 63 கிலோ முதல் 145 கிலோ எடை கொண்ட நெருப்புக் கோழிகள் உள்ளன. ஆண் கோழியின் எடை பெண் கோழியை விட அதிகமாக இருக்கும். ஆண் கோழிகள் 6 முதல் 9 அடி உயரம் வரையிலும், பெண் கோழிகள் 5 முதல் 6 அடி உயரமும் வளரக் கூடியது.
உலகிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய பறவை இதுதான். நீண்ட நேரத்திற்கு அதாவது தொடர்ந்து மணிக்கு 53 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது. உச்சகட்டமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை ஓடும் ஆற்றல் பெற்றது. ஒரு மாத வயதுள்ள குஞ்சு நெருப்புக்கோழியே மணிக்கு 55 கி.மீ வேகத்தில் ஓடும் என்றால் எப்படிபட்ட ஓட்டம் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாக எடை குறைவான மனிதர்கள் சவாரிசெய்யக் கூடிய அளவுக்கு நெருப்புக்கோழிகள் அளவில் பெரியதாகும். முக்கியமாக வட ஆப்பிரிக்கா மற்றும் அரேபியாவின் சில பகுதிகளில் ஓட்டப் பந்தயம் மற்றும் சவாரிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தீக்கோழிகளுக்கு பற்கள் கிடையாது. எனவே உணவை அரைத்து உண்பதற்காக, அதன் கூடவே கல்லையும் விழுங்கும். உணவாக தாவரங்கள், விலங்குகள், கிழங்குவகைகள், இலைகள், பழங்கள், கொட்டைகள், வெட்டுக்கிளி, பூச்சிகள், பாம்புகள், பல்லிகள் என ஊர்வன இனங்களை நெருப்புக்கோழி விரும்பிச் சாப்பிடும்.
தண்ணீர் குடிக்கும் பழக்கம் நெருப்பு கோழிகளுக்கு கிடையாது. தனக்கு தேவையான தண்ணீைர தாவரங்களிலிருந்தே எடுத்துக்கொள்கிறது. நெருப்புக்கோழியின் கால்கள் மிகவும் நீண்ட அளவுடையது.
டைனோசர் கால்களைப் போல் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும். இதன் கால்களில் 2 விரல்கள் மட்டுமே இருக்கும். முக்கியாக நெருப்புக்கோழியின் மூளை அதன் கண்களைவிட சிறியது.
ஒரு பெண் நெருப்புக்கோழியை கவர்வதற்கு ஆண் கோழி தலையைக் குனிந்து தனது இறக்கைகளை வெளிப்புறமாக மடக்கும்.
துணையுடன் தயாராக இருக்கும்போது, ஆணின் அலகு மற்றும் தாடைகள் சிவப்பு நிறமாக மாறும். இதேபோல் துணைக்கு தயாராகும்போது பெண் நெருப்புக்கோழியும் நிறத்தை மாற்றும்.
உலகிலேயே மிகப் பெரிய முட்டை நெருப்புக் கோழி முட்டைதான். இந்த முட்டை எடை ஒன்றரை கிலோ வரை இருக்கும். ஒரு ஆள் ஏறி நின்றாலும் உடையாது. பல பெண் நெருப்புக்கோழிகள், தங்கள் முட்டைகளை ஒரே கூட்டில் இடும்.
இந்த முட்டைகளை பகலில் பெண் தீக்கோழிகளும், இரவில் ஆண் தீக்கோழிகளும் அடை காக்கும். குஞ்சு பொரித்து வெளிவர 42 முதல் 46 நாட்கள் ஆகலாம்.
நெருப்புக்கோழி கூட்டுக் குடும்பமாக வாழும். சுமார் 10 முதல் 50 தீக்கோழிகள் ஒன்றாக வாழ்கின்றன. இந்த கூட்டத்திற்கு ஒரு ஆண் மற்றும் பெண் கோழி தலைமையில் வழிநடத்திச் செல்லும்.
ஆதிக்கம் செலுத்தும் ஆண் இருப்பிடத்தை பாதுகாக்கும். ஆண் தீக்கோழி எச்சரிக்கை அழைப்பு சத்தமாகவும், ஆழமாகவும் இருக்கும். இந்த சத்தத்தை தூரத்திலிருந்து கேட்கும்போது சிங்கத்தின் கர்ஜனை போன்று இருக்கும்.
நெருப்புக்கோழி தனக்கு ஆபத்து என்று உணரும்போது, தனது தலையை மணலில் புதைத்துக் கொள்ளும் என்ற கதை வெகு காலமாக கூறப்படுகிறது. ஆனால், இது உண்மை இல்லை.
அதாவது எதிரி விலங்குகளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள, தனது கழுத்தையும், தலையையும் நிலத்தில், படுக்கை நிலையில், வைத்துக்கொள்ளும் முறையைத்தான் மணலில் தலையை புதைத்துக் கொள்கிறது என்று கதையாக மாறியதாக பலரால் கூறப்படுகிறது.
40 முதல் 45 ஆண்டுகள் வரை வாழும் நெருப்புக்கோழிகள் ஆப்பிரிக்காவின் வறண்ட, சூடான சவன்னா புல்வெளி பகுதிகளில்தான் அதிகம் உள்ளன. இதே பகுதியில் ஆப்பிரிக்க சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் கழுதைபுலி போன்ற வேட்டையாடும் மிருகங்களும் அதிக அளவில் வாழ்கின்றன.
அசுர பலம் வாய்ந்த சிங்கங்கள் மற்றும் உலகிலேயே அதிவேகமாக ஓடி வேட்டையாடும் சிறுத்தைகளுக்கிடையே இந்த நெருப்புக்கோழிகளால் எப்படி வாழ முடிகிறது என்றும் நாம் ஆச்சர்யப்படலாம்.
ஆனால் அதன் பின்னணியில் இருப்பது அதன் நீளமான மற்றும் வலிமையான கால்கள்தான். எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள முழுப்பலத்தையும் பயன்படுத்தி தனது காலால் ஒரு உதை விட்டால், தன்னை வேட்டையாட வரும் விலங்குகளின் விலா எலும்புகள் நொறுங்கி தூள்தூளாகிவிடும். இந்த பலமே இவைகளால் அங்கு வாழ முடிகிறது என்கின்றனர் விலங்கு ஆய்வாளர்கள். இது உண்மையும் கூட.
பொதுவாக உலகம் முழுவதும் நெருப்புக்கோழிகள் வளர்க்கப்படுகிறது குறிப்பாக குளிர் பிரதேசங்களில் நெருப்புக்கோழிகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.
முக்கியமாக சுவீடன் போன்ற குளிர்ப் பிரதேசங்களில் இவை அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. இதன் இறைச்சி கொழுப்பற்ற மாட்டிறைச்சி போன்ற சுவை கொண்டதாகச் சொல்லப்படுகின்றது.
தீக்கோழிகளின் இறகுகள் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காக அதிகம் உபயோகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தோல் பொருட்கள் தயாரிப்பதற்கும் அலங்காரப் பொருட்கள் செய்வதற்கும் இந்த முடிகள் பயன்படுகிறது.
உலகமெங்கும் சுமார் 20 லட்சம் நெருப்புக்கோழிகள் இருப்பதாகக் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. டைனோசர் காலத்தில் வாழ்ந்த நெருப்புக் கோழிகள் இன்றும் நம்மிடம் இருப்பது ஆச்சர்யமான ஒன்றுதான் என்பைத நாம் மறுக்க முடியாத ஒன்றுதான்.
சரி, நெருக்கோழி குறித்த தகவல்கள் நிச்சயமாக உங்களுக்கு பயன் அளிக்கும் என்று நம்புகின்றேன். இதுபோல் வேறு ஒரு ஆச்சர்யமான தகவலில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் ரமேஷ் நன்றி வணக்கம்.