
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தை அடுத்த வள்ளனந்தபுரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடமும் அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்து, அவனியாபுரம் – விமான நிலைய சாலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதுரை மாநகராட்சி மற்றும் மேற்கு மண்டல அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ,மறியலை கைவிட போவதில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் உறுதியின் பேரில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
அவனியாபுரம் – விமான நிலையம் செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், இப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.