
திருமாலிருஞ்சோலை தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில், 3 ஆண்டுக்கு ஒரு முறை தைமாத நிறை அமாவாசையன்று நடைபெறும் திருத் தைலக்காப்பு ஏற்கனவே நடந்தது.
இதைத் தொடர்ந்து, தை மாத அமாவாசை முதல் ஆடிமாத அமாவாசைக்கு முதல் நாள் வரை 6 மாதங்கள் வரை திருத்தைலம் சாத்துபடி நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த ஜனவரி மாதம் 31ந் தேதி முதல் ஜூலை மாதம் 27ந் தேதி வரை பூஜைகள் மூலவருக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடி அமாவாசை விழா வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது.
அன்று முதல் மூலவர் சுந்தரராச பெருமாள், தேவியர்களுக்கும் நிறை பூமாலை, பரிவட்டம், வஸ்திரம், சாத்துதல், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் மு.ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை, கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.