அழகர்கோவில் நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராட அனுமதி; பக்தர்கள் மகிழ்ச்சி
Madurai News

திருமாலிருஞ்சோலை தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும்.
இங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அழகர் மலைமேல் பிரசித்தி பெற்ற நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. அழகர்கோவில் வரும் பக்தர்கள் அனைவரும் மலைமேல் உள்ள நூபுர கங்கையில் புனித நீராடி பின் கள்ளழகரை வணங்குவது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டது. அரசு வழிகாட்டுதல் படி கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்ட போதிலும் நூபுர கங்கையில் புனித நீராட அனுமதி வழங்கப்படவில்லை. எப்போது திறக்கப்படும் இந்த நூபுரகங்கை தீர்த்தம்? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இதைதொடர்ந்து தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் ராக்காயி அம்மன் கோவில் நூபுரகங்கை தீர்த்தம் இன்று காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இதையொட்டி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை வணங்கி சென்றனர். 10 மாதங்களுக்கு பிறகு புனித நீராட அனுமதி கிடைத்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.