
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பொதும்பு பகுதியில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல்துறை தலைமையிலான போதைபொருள் தடுப்புபிரிவு தனிப்படை போலீசார் மற்றும் அலங்காநல்லூர் காவல் துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக அவ்வழியாக வந்த 5 பேரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.
அவர்கள், இருசக்கர வாகனம் மூலமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேற்கண்ட விசாரணையில், பொதும்பு, சங்கையா நகரை சேர்ந்த பிரேமா (53), அவரது கணவர் ராஜாராம் (58), பேரையூர், காளப்பன்பட்டியை சேர்ந்த ஆதிராஜா (39), ஜெயபிரகாஷ் (30), மற்றும் உசிலம்பட்டி, வேப்பனூத்தை சேர்ந்த ரவி(38) ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 21.5 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.