
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில்நடைபெற்ற பல்வேறு விழாக்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி புதிய நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையக் கட்டடம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்கள்.
குறிப்பாக, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மாணிக்கம்பட்டி கிராமத்தில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றையும், பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய நியாய விலைக்கடைக்கான கட்டடத்தையும், ஆதனூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய உணவு தானிய சேமிப்பு கிட்டங்கியையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்கள்.
மேலும், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய நியாய விலைக் கடை மற்றும் ஆலாத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் அலுவலக கட்டடம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகலா கலாநிதி, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பஞ்சு அழகு, அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.