
கோவையிலிருந்து 18 கி.மீ தொலைவில் பெரிய தடாகம் எனும் பகுதியில் அமைந்துள்ளது அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில். இக்கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த, ரம்மியமாக காட்சியளிக்கும் பகுதியாக இவ்விடம் அமைந்துள்ளது.
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் முருகனிடம் வேண்டிய ஹனுமனுக்கு தாகம் தீர்க்கப்பட்ட இடமாகவும் கூறப்படுகிறது. ஹனு என்றால் ஆஞ்சநேயரையும், வாவி என்றால் ஊற்று, நீர் நிலைகளை பொருளாக கொண்டதால் இவ்விடம் அனுவாவி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் வற்றாத சுனை ஒன்று இங்குள்ளது.
565 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலில் முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மேலும், கருவறையில் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு விநாயர், முருகனின் படைத்தளபதியான வீரபாகு, ஆஞ்சநேயர், நவக்கிரகம், அருணாச்சலேசுவரர் ஆகியோருக்கு தனிச்சன்னதிகள் உள்ளன. மலை அடிவாரத்தில் 48 அடிகளை கொண்ட பெரிய ஆஞ்சநேயர் சிலையும், அகஸ்தியர் ஆசிரமும் உள்ளது. மலை ஏற்றத்தில் இடும்பனுக்கு தனி சன்னதி உள்ளது.
இங்குள்ள முருகனை வேண்டுவோருக்கு குழந்தை பாக்கியம், மனநோய், தோல் நோய் ஆகியவை தீரும் என்ற நம்பிக்கை உண்டு. மேலும் திருமணத்தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கையாக செலுத்தி கல்யாண உற்சவம் நடத்துக்கின்றனர்.
தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கிருத்திகை போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இக்கோவிலுக்கு சென்று வர பஸ்வசதிகள் உள்ளன. முருகனின் 7வது படைவீடாக கருதப்படும் மருதமலை முருகன் கோவில் இக்கோவிலுக்கு அருகில் உள்ளது கூடுதல் சிறப்பாகும்.