
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (11.07.2022) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ். அனீஸ்சேகர் பொது சுகாதாரத் துறை சார்பாக பள்ளிக் குழைந்தைகள் நல வாழ்வு திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச அறுவை சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பள்ளிக் குழந்தைகள் நல வாழ்வு திட்டத்தின் (ராஷ்ட்ரிய பால் சுரக்ஷா கார்யகிரம் – RBSK) கீழ் 0-18 வயதுடைய குழந்தைகளுக்கு பிறக்கும்போதே ஏற்படும் குறைபாடுகள், நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடு போன்ற நான்கு விதமான குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடி சிக்ச்சையின் மூலம் குணப்படுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மதுரை மாவட்டத்தில் வட்டார அளவிலான இரண்டு மருத்துவ குழுக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இம்மருத்துவ குழுக்கள் குழந்தைகளை பரிசோதித்து பிறவியிலேயே ஏற்படும் இதய நோய், உதடு பிளவு மற்றும் அன்னப் பிளவு, செவித்திறன் குறைபாடு, கால் பாத வளைவு போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயர் மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்வதற்கு மாவட்ட ஆரம்ப நிலை இடையீட்டு சிகிச்சை மையம் மூலம் பரிந்துரை செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரையில் 1,04,588 அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் 1,47,856 பள்ளி குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 122 குழந்தைகளுக்கு பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அவர்களில் உயர் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் 84 பேர், அறுவைசிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் 38 பேர். இவர்களில் 35 நபர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்து அனைவரும் நலமுடன் உள்ளனர்.
அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருதய அறுவை சிகிச்சை 17 பேருக்கும், உதடு பிளவு அன்னப்பிளவு போன்றவை 18 பேருக்கும் பிறவியிலேவே செவித்திறன் குறைபாடுள்ள 2 நபர்களுக்கும், கால் பாத வளைவிற்கு 1 நபருக்கும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் ஏப்ரல் 22 முதல் மே 22 வரையிலான காலகட்டத்தில் 54,206 அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் 52,041 பள்ளிக் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 46 குழந்தைகளுக்கு பல்வேறு குறைபாடுகள் கண்டறிப்பட்டுள்ளன.
அவர்களில் உயர் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் 28 பேர், 18 பேர் அறுவைசிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்தில் இருதய அறுவை சிகிச்சை 8 பேருக்கும், உதடு பிளவு அன்னப்பிளவு அறுவை சிகிச்சை 1 நபருக்கும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, அறுவைசிகிச்சை செய்து பூரண குணமடைந்துள்ள குழந்தைகளில் 31 குழந்தைகளுக்கு இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ். அனீஸ்சேகர்., ஊக்க பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும், கலை பண்பாட்டு துறை சார்பாக நடத்தப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சி போட்டிளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையினையும், மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை சார்பாக தேசிய மீன் வளர்ப்போர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாரட்டினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.எஸ்.செந்தில்குமார் அவர்கள், கலை பண்பாட்டு, மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.