
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், வைகை பொறியியல் கல்லூரியில் (26.05.2022) பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான உண்டு, உறைவிட இலவசப் பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மாணவ, மாணவியர்களின் மருத்துவக்கல்வி கனவினை நனவாக்கிடும் நோக்கில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்திட வேண்டும் என்பதை தலையாய கொள்கையாக கொண்டு தொடர்ந்து சட்டப்போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள்.
சட்டமன்ற கூட்டத்தில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்திட வலியுறுத்தி அனைத்துக்கட்சி பிரதிநிதிகளோடு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதன்முறை இந்த தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படாததை அடுத்து மீண்டும் அதே தீர்மானம் சட்டமன்ற கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு உரிய மேல்நடவடிக்கைக்காக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மூலம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியுமோ என்ற அச்சத்தில் சில தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர். இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் தமிழ்நாட்டில் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்கள்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி வாய்ப்புள்ள மாணவ, மாணவிர்கள் நீட் தேர்விற்காக அதிக கட்டணம் செலுத்தி சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்வதற்காக சென்னை, டெல்லி, கேரளா, பெங்களுர் போன்ற பெருநகரங்களில் சேர்ந்து பயில்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் நீட் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் இந்த உண்டு, உறைவிட இலவசப் பயிற்சி நடத்தப்படுகின்றது.
மதுரை மாவட்டத்தில் ஆங்கிலம், தமிழ் வழியில் அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் தகுதி பெற்ற மாணவ, மாணவியர்கள் உட்பட 410 மாணவ, மாணவியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு 175 மாணவிகள், 50 மாணவர்கள் என மொத்தம் 225 குழந்தைகள் இந்த உண்டு, உறைவிட இலவசப் பயிற்சியில் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.
மீதமுள்ள நபர்களுக்கு இணைய வழியில் பயிற்சி வழங்கப்படுகிறது. அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களை கொண்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட நீட் தேர்விற்கான தமிழ்வழி பயிற்சி கையேடும், ஆங்கிலவழி பயிற்சி கையேடும் வழங்கப்படுகின்றது.
இன்று தொடங்கி ஜீலை 13-ஆம் தேதி வரை 49 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பினை மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.
இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவியர்கள் நலனுக்காக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நன்கொடையாக ரூபாய் 2 இலட்சம் வழங்கியுள்ளார்.
மேலும், யங் இந்தியன்ஸ் தன்னார்வ அமைப்பின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூபாய் 4 இலட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவியர்களுக்கான பயிற்சி கையேடுகள் வழங்குவதற்கும், வைகை பொறியியல் கல்லூரியின் சார்பாக மாணவ, மாணவியர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் உள்ளிட்ட வசதிகள் தன்னார்வமுடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், யங் இந்தியன்ஸ் தன்னார்வ அமைப்பு தலைவர் எல்.சேவுகன், வைகை பொறியியல் கல்லூரியின் தாளாளர் முனைவர்.இரா.திருச்செந்தூரான், மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அ.நாராயணன் உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.