
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சாத்தங்குடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய ஊரணி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வினைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்ததாவது:-
இந்தியா தேசம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் கிராமப்புறங்களில் நீர்நிலைகளை மேம்படுத்துவது தொடர்பாக புதிய குளங்களை உருவாக்குதல் மற்றும் புனரமைத்தல் ஆகியவை ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மத்திய அமைச்சகம் மற்றும் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் அம்ரித் சரோவர் என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 15.08.2023-க்குள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியத்திற்கு 8 குளங்கள் வீதம் மொத்தம் 104 குளங்கள் உருவாக்கிட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் தூய்மைான குடி நீர் வழங்குவதாகும். மேலும் இத்திட்டமானது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (AGAMT) 15-வது நிதிக்குழு மானியம், சமூக பொறுப்பு செயல்பாடு (CSR Activity) PMKSY-WDC, PMKSY-HKKP-RRR, தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்தோ செயல்படுத்தப்படுகிறது.
கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் அப்பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள், மூத்த குடிமகன், ஊராட்சி பிரதிநிதிகள் கொண்டு, கொடி அசைத்து பெயர்ப் பலகைகள் வைத்து பணிகள் துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல ஊராட்சி பிரதிநிதிகள், சுயஉதவிக்குழுக்கள், பள்ளி குழந்தைகள், இளைஞர் குழுக்கள் மூலம் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
மேலும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சாத்தங்குடி ஊராட்சியில் புது ஊரணி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் இதைப் போன்று மாவட்டத்தில் உள்ள ஏனைய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து நிறைவேற்றி 15.08.2023-க்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன்,, செயற்பொறியாளர் துமதி அவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.