தெருக்கள்மதுரை

அம்மன் சன்னதியும், ஆடி வீதியும் – தெரு – 05

Madurai Street - 05

கடந்த பதிவில் கிழக்கு கோபுரம் பற்றியும் தெற்கு கோபுரம் பற்றியும் விரிவாக தெரிந்து கொண்டோம். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் அம்மன் சன்னதி கோபுரங்கள் குறித்தும் ஆடி வீதிகள் குறித்தும் காணப்போகின்றோம். வாங்க உள்ளே செல்லலாம்… முதலில் அம்மன் சன்னதி கோபுரம் பற்றி தெரிந்து கொள்வோம். அம்மன் சன்னதியில் 3 கோபுரங்கள் உள்ளன. அவை, சித்திரக்கோபுரம் (கிழக்கு),சன்னதிக் கோபுரம் (கிழக்கு), கடகக் கோபுரம் (மேற்கு) ஆகியவைகள். சரி இனி இதனை விரிவாக கீழேக் காண்போம்.

1) சித்திரக்கோபுரம் (கிழக்கு)
அரியாத முதலியாரின் மகன் காளத்தியப்ப முதிலியாரால் கி.பி. 1569இல் கட்டப்பட்டது. இதன் உயரம் 37.8 மீட்டர். இக்கோபுரங்களில் காணப்படும் அழகிய சித்திரங்களால் சித்திர கோபுரம் எனும் பெயர் பெற்றது.

2) சன்னதிக் கோபுரம் (கிழக்கு)
வேம்பத்தூர் ஆனந்தக் தாண்டவநம்பி கி.பி.1227 இல் கட்டிய இக்கோபுரத்தின் உயரம் 12.4 மீட்டர். இதனை வேம்பத்தூரார் கோபுரம் என்றும் அழைப்பது உண்டு.

3) கடகக் கோபுரம் (மேற்கு)
வீரத் தும்மசி கட்டிய இக்கோபுரம் 20 மீட்டர் உயரமுடையது. கி.பி. 1570இல் கட்டப்பட்டது. கிருஷ்ண வீரப்ப நாயக்கரின் (1564 – 1572) ஆட்சியை எதிர்த்து வீரத்தும்மசி தலைமையில் நடந்த கலவரம் முறியடிக்கப்பட்ட ஒரு வரலாறு உண்டு.

ஆடி வீதிகள்

அம்மன் சன்னதிக்கு அடுத்து ஆடி வீதிகளைக் காண்போம். மதுரையில் எத்தனை வீதிகள் இருந்தாலும் ஆடி வீதிக்கு என்று ஒரு தனி சிறப்பே உள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் நான்கு வீதியையும் சுற்றி வருவதற்கு என்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வீதிகள் ஆகும். சரி, இனி நாம் ஆடி வீதி அமைப்பு மற்றும் அதனை உருவாக்கியவர்கள் குறித்து காண்போம்…

மீனாட்சி – சுந்தரேசுவரர் கோயிலின் வெளி மதில்களை மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238) கட்டினார். காலத்தால் முந்திய சுவாமி சன்னதியிலுள்ள கிழக்கு கோபுரத்தையும் இவரே கட்டினார். இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் மீனாட்சி கோயில் சிதைவுற்றது. ஆலய வழிபாடு நிறுத்தப்பட்டது. தமது ஆட்சியில் மீனாட்சி கோயிலுக்குச் சில திருப்பணிகள் புரிந்து, வழிபாட்டுக்கு கோயிலை திறந்து வைத்தார் விசுவநாதநாயக்கர் (1529-1564) இவர் காலத்தில்தான் இன்றைய கோயில் அமைப்பு உருவாக்கப்பட்டது என்பர். மீனாட்சி கோயிலைச் சுற்றி கோபுர வாயில்களை இணைத்துப் பெரிய வெளிப்புறச் சுவர்கள் விசுவநாத நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டன.

மீனாட்சி கோயிலில் 3 திருச்சுற்றுகள் அமைந்துள்ளன. முதல் இரு சுற்றுகள் கோயிலுக்குள் சுந்தரேசுவரருக்காகவும், மீனாட்சிக்கெனவும் அமைந்துள்ளன. மூன்றாவது திருச்சுற்று வெளிப்புறச் சுவரையயாட்டி அமைகின்றது. இம் மூன்றாவது திருச்சுற்றே ஆடி வீதி எனப்படும் சுவாமி கோயில், அம்மன் கோவில்களையும் ஓருங்கே வலம் வருவதற்கேற்ப ஆடி வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கற்களால் பதிக்கப்பட்ட இந்நான்கு வீதிகள் பக்தர்கள் ஆடிக்கொண்டு வலம் வருவதற்காக அமைக்கப்பட்டிருப்பதால் ஆடி வீதிகள் என பெயர் பெற்றன என்பர். ஆடி வீதிகளில் காணப்படும் சில மண்டபங்கள்அரசி மங்கம்மாள் (1689 / 1706) கட்டியவை ஆகும். ஊஞ்சல் மண்டபத்தின் கிழக்கிலுள்ள கூரைப் பகுதியில் காணப்படும் வண்ண ஓவியங்கள் இவ்வரசியாரின் காலத்தில் தீட்டப்பட்டவை ஆகும்.

வெளிப்புறச் சுவர் 847 அடி நீளமும் 792 அடி அகலமும் கொண்டது. இவ் அகன்ற பரந்த எல்லைக்குள் ஆடி வீதிகள் அமைந்துள்ளன. இவ்வீதியின் கிழக்குப்பகுதி கீழ ஆடி வீதி என்றும் மேற்குப் பகுதி மேல ஆடி வீதி என்றும் வடக்குப் பகுதி வடக்காடி என்றும் தெற்குப் பகுதி தெற்காடி வீதி என்னும் பெயர் பெறுகின்றன.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

டி. தேவராஜ்

மதுரை எழுத்தாளர்கள் பட்டியலில் முக்கியமாக அறிய வேண்டிய நபர்களில் டி.தேவராஜ் அவர்களும் ஒருவர். மிகச் சிறந்த நூல்களை படைத்துள்ளார். மதுரை குறித்து பல நூல்களை வெளியிட்டிருந்தாலும், மதுரை நகர தெருப் பெயர்கள் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள இவரது நூல் மதுரைக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த நூலின் தொகுப்பினைத்தான் நாம் இங்கு பார்க்கின்றோம். இவர் பசுமலை உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Back to top button
error: