
மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட எல்லீஸ் நகர் மற்றும் அன்சாரி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மனுக்கள் அளித்த மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாநகராட்சியில் உள்ள வெள்ளிவீதியார் பள்ளி, சுந்தரராஜபுரம் மற்றும் தருமை ஆதினம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கடந்த வாரம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளான காதொலி கருவி, மூன்று சக்கர ஸ்கூட்டர், செயற்கை கால், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவி வேண்டி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து சுமார் 900-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 15 பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று காதொலி கருவி, கைபேசி உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் தகுதியான மனுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.