
பொதுவாக நமக்கு மிருககாட்சி சாலை, விலங்குகள் சரணாலயம், மலை ஏற்றம் என செல்வது தனி பிரியம் தான். வன விலங்குகள், பறவைகள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் காணலாம். மிருகக்காட்சி சாலை போகும் போது நாம் பலவகை உயிரினங்களை பார்த்திருப்போம். அதில் அணிலும் ஒன்று. அந்த அணில்களிலே பல வகை உண்டு. அப்படி ஒன்று தான் சாம்பல் நிற அணில்கள் (Grizzled Squirrel) என்ற அதிசயவகை அணில்கள்.
இந்த அணில்களுக்கு தனி சரணாலயம் தமிழகத்தில் உள்ளது. ஆம். அதுதான் ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம். சரணாலயங்களின் புகலிடமாக உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் தான் இந்த சரணாலயமும் உள்ளது. மேற்கில் கேரளத்தின் பெரியாறு புலிகள் காப்பகமும், வடமேற்கில் மேகமலை காப்புக்காடும், கிழக்கில் சிவகிரி காப்புக்காடும் சூழ்ந்துள்ளன இச்சரணாலயம் 1989ஆம் ஆண்டு 480 ச.கி.மீ. பரப்பளவில் நிறுவப்பட்டது.
இதனை நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சாம்பல் நிற அணில்களில், இளஞ்சிவப்பு மூக்கு, அடர்த்தியான முடியுடன் கூடிய நீண்ட வால், சாம்பல் நிற முதுகுப் பகுதி என பார்க்க மிகவும் அழகாக பெரியதாக இருக்கிறது. 1 முதல் 1.8 கிலோ எடையுடனும், ஒரு சிறிய பூனை அளவிலும் இருக்கும் இந்த அணில்கள் மூக்கிலிருந்து வால் வரையிலும் 73.5 செ.மீ. நீளமும், வால் பகுதி மட்டுமே 36 – 40 செ.மீ. நீளமாகவும் உள்ளது.
சாதாரணமாக நம் வீட்டு பகுதியில் வசிக்கும் அணில்கள் மரங்கள், வீடுகளின் இடுக்குகளில் கூடு கட்டி வசிக்கும். இதில் சாம்பல்நிற அணில்கள் கொஞ்சம் விசித்திரமானவை. சாம்பல் நிற அணில்கள், மிகவும் அடர்த்தியான வனப்பகுதி யில் மட்டுமே வசிப்பவை. ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள பெரிய, உயரமான மரங்களில் இந்த அணில்கள் வாழ்கின்றன.
இந்த அணில்கள் மரங்களின் உச்சிக்கிளைகள் சந்திக்கும் உச்சியில் கூடு கட்டி வாழ்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு கூடுகளைக் கட்டி வசிக்கும் சாம்பல் நிற அணில்கள் அரிதாவும் காணப்படுகின்றன. ஏதேனும் மற்ற விலங்குகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது மரத்திற்கு மரம் தாவிச் செல்லும். உலகில் உள்ள சாம்பல் நிற அணில்களில், 75 சதவீதம் மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் உள்ளன. பழங்கள், விதைகள், பூச்சிகள், பறவைகளின் முட்டைகள் மற்றும் மரங்களின் பட்டைகள் இந்த அணில்கள் உண்ணுகின்றன.
ஒரு சாம்பல் நிற அணிலின் சராசரி வசிப்பிடப் பரப்பு 1.970 சதுர மீட்டர் முதல் 6.110 சதுர மீட்டர் ஆகும். இவை பொதுவாக மரங்களின் உச்சியிலே வாழும். அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை உயிர் வாழும் இந்த அணில்கள் ஆண்டுக்கு ஒரு குட்டியை மட்டுமே ஈனும். புலிகளைப் போலவே, இந்த அணில் களும் தனக்கென்று, எல்லையை வகுத்துக் கொண்டு வாழும்.
இச்சரணாலயத்தில் நரை அணில்கள் மட்டுமல்லாமல், புலி, சிறுத்தை, புள்ளி மான், சிங்கவால் குரங்கு, தேவாங்கு, கரடி, பறக்கும் அணில் மற்றும் 100க்கும் மேற்பட்ட பறவையிங்கள் உள்ளிட்ட பல வகை விலங்குகளை பார்க்க முடிந்தாலும், சாம்பல் நிற அணிலுக்கே பெயர் பெற்றதாக உள்ளது. இந்த சின்ன உயிரினத்தோட சரணாலயத்தினை நாமும் ஒரு முறை ரசித்து விட்டு வருவோம்.