அடங்காத வெள்ளியங்குன்றம் ஆண்டிச்சாமி கோவில் காளை
நடந்து வந்து வீரர்களை பந்தாடும் | Velliyankundram | Jaliikattu
#ஜல்லிக்கட்டு #ஆண்டிச்சாமிமாடு #வெள்ளியங்குன்றம்
பயண அனுபவம்
வாடியில் நின்று நிதானமாய், நடந்து எதிரில் வரும் வீரர்களை தூக்கி வீசி பந்தாடும் காளைதான் வெள்ளியங்குன்றம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி கோவில் காளை. 25 வாடிகளுக்கும் மேல் தனது சிறப்பான ஆட்டத்தை காட்டி அனைவரின் மனதிலும் நீங்க இடம்பிடித்துள்ளது.
வாடியில் சர்வ சாதாரணமாக வீர நடைபோடும், இந்த காளையை காண்பதற்கு ஒரு கூட்டமே இன்றைக்கு உருவாகியுள்ளது. பார்ப்பதற்கு அப்பாவிப்போல் ஊருக்குள் இருக்கும் அந்த ஆண்டிச்சாமி, களம் என்று வந்துவிட்டால் கந்தல் கந்தலாக வீரர்களை தூக்கி வீசி எறியும் காட்சிகளைத்தான் வாடியில் காண முடியும். மதுரையின் மிகச் சிறந்த மாடுகளில் ஆண்டிச்சாமி காளையும் ஒன்று.
இப்படிப்பட்ட காளையை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இல்லாமல் போய்விடுமா ? என்ன ? இதற்கு அச்சாரம் போட்டவர், மதுரை உழவன் YouTube Channel தம்பி விக்கி அவர்கள்தான். வெள்ளியங்குன்றம் தம்பி சிவா அவர்கள்தான் இதற்கான முழு ஏற்பாட்டையும் செய்து கொடுத்து கடைசி வரை உடன் இருந்து, வழி அனுப்பிவைத்தார். அவருக்கு எனது நன்றிகள்.
வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு எல்லாம் எழுந்து, 7:30 மணிக்கு வெள்ளியங்குன்றம் சென்று விட்டேன். சுடச்சுட வடை, தேனீர். தம்பி சிவா அவர்கள் என்னை ஆண்டிச்சாமி இருக்கும் இடமான புதூருக்கு அழைத்துச் சென்றார். முதன் முதலாக பார்க்கும்போதே அப்படி ஒரு அழகு. என்னைப்போல் கரு கருவென… மறைமாடுபோல் கழுத்துப் பகுதி, உருட்டும் கண்கள், வில் போன்ற கொம்பு என என்னை மிகவும் கவர்ந்தது.
பார்ப்பதற்கு மிக சாதுவாக இருந்தது. ஆனால் தனி ஆளாக பக்கத்தில் செல்ல, அதை 7 ஆண்டுகளாக வளர்த்து வரும் கருப்பு அண்ணன் அவர்களே கொஞ்சம் யோசித்தார்கள். கொஞ்சம் பொறுங்க தம்பி இன்னொருத்தரு வரட்டும் என்றார். நான் அதன் அழகை பார்த்தபடி காத்திருந்தேன்.
வெயில் காலம் துவக்கம் என்பதால், கேமராவுக்கு கொஞ்சம் சிக்கல்தான். லைட்டிங் பிரச்சனை வந்துவிடும். 10 மணிக்குத்தான் ஆரம்பமானது… முதலில் சில்லென்ற குளியல், அதன் பின் சந்தனம், குங்குமம், திருநீரு அலங்காரம்.
நான் அந்த பக்கம் பேச, தம்பி சிவாதான் கேமரா பக்கம் பார்த்துக் கொண்டார். அவரது ஆர்வமும், கவனிப்பும் என்னை நிம்மதியாக பேட்டிக்கு அழைத்துச் சென்றது. முன்னாள் மின்சார ஊழியர் திரு.சின்ன பிடாரி அவர்கள் பேச ஆரம்பித்ததும், குரலில் கனீர் இல்லை என்றாலும், மிகத் தெளிவாக மென்மையாக கேள்விக்கு பதில் அளித்தார்.
சில நேரங்களில் எதிர்பார்ப்பதுபோல் எதிரில் உள்ளவர் பேசவில்லை என்றால் எனக்கும் சோர்வு ஏற்பட்டுவிடுவது வழக்கம். இந்த முறை திரு.சின்ன பிடாரி பேச்சாளர் போல் பேசவில்லை என்றாலும், பொறுப்புடனும், அனுபவத்துடனும் நேர்த்தியாக பேசிய விதம், பேட்டிக்கு இனிப்பாக அமைந்தது. அவருக்கும் கிராமத்தாருக்கும் எனது அன்பு.
நேரம் செல்ல, செல்ல… வெளிச்சம் இங்கும், அங்குமாக கேமராவை நகர்த்திக் கொண்டே இருக்கச் செய்தது. புகைப்படங்களும் நான் எதிர்பார்த்த அளவு சிக்கவில்லை. அந்த நேரத்தில்தான் தம்பி சிவா, அந்த ஊர் பாப்பாவை காளைக்கு அருகில் நிறுத்தினார். எனது கேமரா சட்டென சுதாரித்து கிளிக் செய்தது. அந்த படத்தை சிஸ்டத்தில் போட்டு பார்த்தப்பிறகு தான் பெரிய சந்தோசம் எனக்கு. பாப்பாவும், காளையும் கன கச்சிதமாக இருந்தனர்.
அதைதான் அட்டைபடமாக வைக்க ( youtube Thumbnail ) வேண்டும் என்ற முடிவை அங்கேயே எடுத்துவிட்டேன். அந்த முடிவு பொருத்தமாக அமைந்துவிட்டது. பாப்பாதான் வெஸ்டன் ஸ்டைலில் டிரஸ் அணிந்திருந்தால், பட்டுப்பாவாடை அணிந்திருந்தால் ஏக பொருத்தமாக இருந்திருக்கும். ஆசை எனக்கு அதிகம்தான்.
இறுதியாக அங்கிருந்து கிளம்பும்போது, பாப்பாவிடம் பேசினேன். என்னோடு வருகிறாயா என்று… அவள் சிரித்துக் கொண்டே வெட்கப்பட்டாள். அதன் பிறகு, இன்னொரு பாப்பாவை படம் எடுத்தேன்.
கடைசியாக தேனீர் கடையில், மூன்று கீரை வடை, தக்காளி சட்னியுடன் குழப்பி சாப்பிட்டுவிட்டு, தம்பி சிவா மற்றும் அவரது சித்தப்பா சீனி அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். வெயில் ஹெல்மெட்டை முத்தமிட்டுக் கொண்டிருக்க, நான் எனது இதயத்தை காற்றாடிபோல் சுழற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.
மீண்டும் வேறு ஒரு பயண அனுபவத்தில் உங்களை சந்திக்கின்றேன். நன்றி வணக்கம்.
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: https://play.google.com/store/apps/de…
🔵Online Web Tv : https://hellomaduraitv.com/
🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv
🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/
🔵 Agri News website : https://tamilvivasayam.com/
🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________