
மதுரை மேம்பாலம் என்று மதுரைக்காரங்களால் கொண்டாடப்படும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் கடந்த ஆண்டு( 2019) தனது 130வது ஆண்டு சேவையை தொடர்ந்தது. ஆற்றிலே தண்ணி வர, ஆடு மாடு அவதிப்பட, நேத்து வந்த வெள்ளைக்காரன் நினைச்சிட்டானே பாலங்கட்ட என்ற ஆதங்கமான நாட்டுப்புறப்பாட்டு இங்கு மூன்றாண்டுகள் நடந்த கட்டுமானப் பணிகளை பார்த்தவர்களாலேயே பிறந்து இருக்கக் கூடும். அதற்கு முன்பாக செல்லூர் திருவாப்புடையார் கோவிலில் இருந்து, ஆதிச்சொக்கநாதர் கோவில்வரை படகு போக்குவரத்து இருந்ததாக எனது அம்மாயி (அம்மாவின் அம்மா) கூறக் கேட்டு இருக்கிறேன்.
இன்றும் பயன்பாட்டில் இருக்கும் பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தின் மாதிரி வடிவாக்கம் Model தற்போது தல்லாகுளம் காவல்நிலையமும், காவலர்கள் குடியிருப்பும் கட்டப்பட்டுள்ள இடத்தில் மேம்பாலம், மற்றும் கல்பாலம் இரண்டும் செங்கல்களால் கட்டப்பட்டு இருந்தை ஐம்பதை கடந்த என்போன்ற மதுரைவாசிகள் பார்த்து இருக்கக்கூடும். மாட்டுவண்டிகள், மிதிவண்டிகள், கனரகவாகனங்கள் செல்லக்கூடாது என அறிவிப்புப் பலகை இருந்த இடத்தில் தற்போது கடந்த ஆண்டு விபத்தில் இழந்தவர்கள் குறித்த புள்ளிவிபரம் படிக்க நெருடலாக உள்ளது.
தற்போது மீனாட்சி மகளிர் கல்லூரி உள்ள இடத்திற்கு எதிரில் பாலத்தில் ஏறி, இறங்வதற்கும், ஆழ்வார் புரத்தில் இருந்து ஏறி இறங்குதற்கும் படிக்கட்டுகள் இருக்கும். அந்த பாலத்தில் பேருந்துகள் நின்று செல்லும். அழகிய பேருந்து நிழற்குடைகளும் இருந்தது நினைவில் இருக்கிறது. ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவிலும், வெள்ளப்பெருக்கு காலங்களிலும் ஆற்றை மேம்பாலத்தில் இருந்து பார்ப்பது அப்பா தோள்மீது இருந்து பார்ப்பது போன்ற ஆனந்த அனுபவம்.
மதுரை தெற்கு, வடக்கு பகுதிகளை இணைத்து மதுரை மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றும் இப்பாலத்தை மேம்பாலம் என்று சொல்வது பொருந்தும் என்றாலும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் என்று வழங்கிவருவதே வடிவமைத்துக் கட்டிய பொறியாளருக்கு நாம் காட்டும் மரியாதையாகும். மேம்பாலத்திற்கு இணையான சிறப்பும், வரலாறும் உடையது மேற்கிலுள்ள கீழ்பாலம் என்னும் கல்பாலம். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அக்கா, அண்ணி, தம்பி, தங்கச்சி, மாமன், மச்சான், பங்காளி, பக்கத்துவீட்டுக்காரன் என்று மதுரைக்காரங்க பாசம் காட்டுற உறவுகளில் இந்த பாலமும் ஒன்னுங்க.