
மதுரை மாநகர் பெருமைப்பட்டுக்கொள்ள ஏகப்பட்ட சங்கதிகள் இருக்கின்றன. இந்த பெருமைகள்தான் அதன் குறைகளை நிவர்த்தி செய்யும் தீர்வாகவும் இருக்கிறது. ஒரு நகரத்தை எப்படி நிர்ணயம் செய்யவேண்டும் என்பதில் மதுரையின் பங்கு மிக முக்கியமானது. தமிழகத்தின் முதல்வராக பெருந்தலைவர் காமராஜர் இருந்த காலத்தில் சில அமைச்சர்கள் நகரமைப்பு பற்றி தெரிந்து கொள்ள சிங்கப்பூர், மலே´யா போய் வரவேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு முதல்வராக இருந்த காமராஜரோ, அங்கெல்லாம் போகவேண்டாம். நம்ம மதுரையை போய் பார்த்துவிட்டு வாருங்கள். அதைவிட சிறந்த நகரமைப்பை வேறெங்கும் பார்க்க முடியாது என்று உத்தரவிட்டார்.
உண்மைதான். நகரமைப்பில் மதுரை பழமையான நகரங்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முன்னணியில் இருக்கிறது. மதுரை அளவிற்கு பழமை பேசும் நகரம் வாரணாசி மட்டும்தான் இந்தியாவில் இருக்கிறது. இந்த நகரில் கூட தெருக்கள் மிகவும் குறுகலாகவே இருக்கின்றன.
குறுகலான தெருக்கள் அமைப்பதுதான் அன்றைய மன்னர்களின் விருப்பமாகவும் இருந்தது. யுத்தம் நடைபெறும் காலங்களில் தனது படை தோல்வி கண்டு நகரத்தை எதிரிப்படைகள் முற்றுகையிடும்போது கடைசி முயற்சியாக இந்த குறுகிய சந்துக்கள்தான் அவர்களுக்கு கைகொடுக்கும். சத்துக்களின் இரு பக்கமும் படைவீரர்கள் மேலிருந்து கீழே வரும் எதிரிகçeத் தாக்கி துவம்சம் செய்வார்கள்.
இப்படிப்பட்ட தாக்குதல்களுக்கு வசதியாய் இருப்பது குறுகிய சந்துக்கள்தான். அதனால் தான் பழமையான நகரங்களில் எல்லாம் தெருக்கள் குறுகளாகவே அமைக்கப் பட்டிருக்கும். மதுரை பழமையான நகரமாக இருந்தபோதும் அதன் தெருக்கள் குறுகலாய் அமைக்கப்படவில்லை. தெருக்கள் எல்லாம் அகலமாகவே அமைக்கப்பட்டன.
இப்படி அகலமாக தெருக்களை அமைத்ததற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். அதில் முதன்மையான காரணம், பாண்டிய மன்னர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள் என்பதுதான். மக்களின் போக்குவரத்து வசதிக்காக அவர்கள் தாராளமாக தெருவை பயன்படுத்தும் வகையில் விசாலமாக அமைத்தார்கள்.
இன்றைக்கு வேண்டுமானால் அவை குறுகலாக தெரியலாம். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் வெறும் மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் மட்டுமே போக்குவரத்தாக இருந்த காலத்தில் இது மிகப் பெரிய அகலமான சாலை என்பதை மறுக்க முடியாது. மதுரை நகருக்குள் எதிரிகள் அவ்வளவு சுலபத்தில் நுழைந்துவிட முடியாது. பாதுகாப்பு அரண்கள் மதுரையைச் சுற்றி இருந்தன.
பொதுவாகவே பழமையான நகரங்கள் எல்லாமே ஏதாவது ஒரு பூங்கா, மைதானம், அரண்மனை, கோயில் போன்றவற்றை மையமாக வைத்தே உருவாக்கியிருப்பார்கள். அதுவும் நதிக்கரையின் ஓரத்திலே நகரம் உருவாகியிருக்கும். இதற்கு காரணம் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் தேவை இருந்ததுதான்.
மதுரையும் வைகை நதிக்கரையில் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியே உருவாகியுள்ளது. பாண்டியர்களுக்கு எதிரிகளாக இருந்தவர்கள் சோழர்களும் சேரர்களும் தான். பாண்டியர்கள் மீது சேரர்கள் படையயடுத்து வருவதெல்லாம் முடியாத காரியம்.
இடையில் மிகப்பெரிய அரணாக நின்று கொண்டிருக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலை. இதைக் கடந்து வருவது சாமானியமான காரியமில்லை. அதனால் பாண்டியர்கள் சேரர்களை அவ்வளவாக கண்டுகொள்ள வில் லை. அவர்கள் பயந்ததெல்லாம் சோழர்க ளுக்குத்தான். அவர்களைத் தடுப்பதற்குத்தான் எந்தவொரு அரணும் இல்லை.
நதியாவது ஒரு பாதுகாப்பாக இருக்கட்டுமே என்றுதான் வைகையின் தெற்குப் பகுதியில் நகரை அமைத்தார்கள். மதுரையின் மையமாக மீனாட்சியம்மன் கோயில் அமைந்தது. அன்றைய மதுரை கீழவெளிவீதி, மேல வெளி வீதி, தெற்கு வெளி வீதி, வடக்கு வெளி வீதி ஆகிய நான்கு வெளி வீதிகளுக்கு உள்ளேயே தான் அமைந்திருந்தது. தற்போது இருக்கும் வெளி வீதிகள் மன்னர்கள் காலத்தில் அகழியாக இருந்தன.
இந்த அகழிகள் மதுரையை பகைவரி டமிருந்து காப்பாற்றின. சுற்றிலும் கோட்டை ச்சுவரால் சூழப்பட்டிருந்த மதுரைக்குள் நுழைவதற்கு நான்கு வாசல்கள் மட்டுமே இருந்தன. கீழ வாசல், மேலவாசல், வடக்கு வாசல், தெற்கு வாசல் என்று. இந்த நான்கு வாசல்கள் வழியாகத்தான் ஒருவர் மதுரைக் குள் நுழைய முடியும். அந்த வாசல்கள் இருந்த பகுதி இன்றைக்கும் அதே பெயரில் அழைக்கப்படுகின்றன.
எழுத்து – எஸ்.பி. செந்தில்குமார்