
இந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி தனது 83 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடப் போகும் மதுரையின் அடையாளமாக இன்றும் விளங்கும் ‘Central Cinema’விற்கு எனது வாழ்த்துக்கள்! என்னுடைய ‘Oh Cinemas’ projectஇல் இது நான்காவது தியேட்டர். நம்ம மதுரைல இன்றும் ஃபிலிம் ரோலில் படம் ஓட்டும் ஒரு பழங்காலத் தியேட்டர். சரி வாருங்கள், சென்ட்ரலுக்குப் போவோம்.
நான் இங்கு வந்தது என்னமோ 82 வயதான Central cinemaவைப் பற்றித் தெரிந்துகொள்ளதான்.
ஆனால் 67 வயதான தியேட்டர் ஆப்பரேட்டர் ராமதாஸைப் பற்றி நிறையத் தெரிந்துக் கொண்டேன்! இதுநாள் வரை 1000 seat உள்ள திரையரங்குகள் தான் பல கதைகளை எனக்குக் கூறியிருக்கின்றது. முதல் முறையாகத் திரைப்படங்களைக் காட்டும் ஆப்பரேட்டர் ரூம் எனக்கு ஒரு கதையைக் கூறியது. இதோ அந்தக் கதையைக் கேளுங்கள்!
பொங்கல் திருநாள். ஒரு பக்கம் விஜய் படம், மறுபக்கம் சிம்பு படம் ரிலீஸ் ஆகியிருக்க, நான் மட்டும் 1974இல் சிவாஜி கணேசன் அய்யா நடித்த ‘சிவகாமியின் செல்வன்‘ பார்க்கலாம் என சென்ட்ரல் தியேட்டருக்கு கிளம்பினேன். இந்த பழமையானத் தியேட்டரை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவல்! 11 மணி ஆட்டத்திற்கு, 9 மணிக்கெல்லாம் உள்ளே போய்விட்டேன். சில பேர் அமர்ந்திருந்தனர்.
அதில் ஒருவரிடம் சகஜமாக பேசலாமென நினைத்து ‘வணக்கம் அண்ணே, என் பேரு சேஷா, மதுர தான் நமக்கு ஊரு. உங்களுக்கு? உங்க பேரு என்ன?படம் பாக்க வந்தீங்கலானு’ கேட்டேன். அவரு என்ன கடுப்புல இருந்தாருனு தெரியல..’சரி, உங்களுக்கு இப்போ என்ன வேணும்…என் பேரு தெரிஞ்சு என்னப் பண்ணப்போறீங்க?’ அப்படீனு பேசிபுட்டாரு!!
என்னடா இது, தியேட்டர் பத்தி தெரிஞ்சுக்கனும், யார்ட்ட கேக்குறதுனு தெரியாம நின்னுட்டு இருந்தேன். சரி தியேட்டர் ஓனர் இருந்தா அவர்ட்டையே பேசிப் பாப்போம்னு வெயிட் பண்ணேன். அது வரைக்கும் என்னிடம் சகஜமாக பேசியது தியேட்டரின் காவலாளி! நான் 40 ரூபா பால்கனி டக்கெட் எடுத்தேன்.
‘அண்ணே படம் போட போறாங்க, நான் மேல இருக்கேன். ஓனர் வந்தா பிலீஸ் சொல்லுங்க’ அப்படினு ஒரு Request வச்சேன் அவரிடம். தியேட்டரின் ஓனர் கணேசன் அவர்கள் 12:30 மணி போல வந்தார். நான் அவரை சந்தித்து, எதற்காக வந்தேன் என்பதை விளக்கினேன். அவர் ஒரு நபரை என்னுடன் அனுப்பி, நேராக Operator Roomஐக் காட்ட சொல்லி, அங்கு தியேட்டர் ஆப்பரேட்டர் ‘Ramadoss’ என்பவர் இருப்பார். 40 வருடங்களாக இங்குதான் பணிபுரிகிறார். அவரிடம் என்ன வேண்டுமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்’ எனக் கூறினார்!
என் வாழ்நாளில் முதல்முறையாக ஒரு தியேட்டரின் Projector Roomக்குள் செல்லும் பாக்கியம் கிடைத்தது! படியேறி உள்ளே செல்ல செல்ல…உடம்பெல்லாம் பூரிப்பு! உள்ளே நுழைந்ததும் ஆப்பரேட்டர் Ramadossஐப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி!! அவர் வேறு யாரும் அல்ல, காலையில் ஒருவித கடுப்பில் ஒரு நபர் என்னிடம் பேசினாரே அவரே தான்!!
சரியாப் போச்சு, இவர்ட்ட என்னக் கேக்கப் போறோம் இல்ல அவர்தான் என்ன சொல்லிடப் போறாறேனு தயக்கத்தோட நின்னேன். அவர் என்னைப் பார்த்ததும், ‘வாங்கத் தம்பி உக்காருங்க, என்ன விஷயம்?என்னென்ன தெரிஞ்சுக்கனும்’னு கேட்டாரு.
நான் கேட்டன் ‘இல்லண்ணே, காலைல கடுகடுனு பேசுனீங்க…நான் எதும் தப்பா பேசிட்டேனா’
இந்தக் கேள்விக்கான பதிலில் இருந்து ஆரம்பமானது எங்களது இனிய புரிதல், உரையாடல்!
‘தம்பி, என் வீடு புதூர்ல இருக்கு. நான் வீட்டுக்கு போய் ஒரு வாரம் ஆச்சு. எனக்கு பதில் வரவேண்டிய ஆப்பரேட்டர் வரல. நான்தான் எல்லா வேலையையும் பாத்துக்கனும். இதுல விடாம மழை பெய்யுது, குளிரடிக்குது!! நேத்து காலைல என் பொண்ணு திருப்பறங்குன்றத்திலிருந்து வந்து சாப்பாடு குடுத்துட்டுப் போனா! பொங்கலுக்கு வீட்ல நான் இல்ல.இந்த ஒரு நிலைமைல நான் இருக்கப்போ தான் என்கிட்ட வந்து நீங்க பேசுனீங்க.’இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
சில நொடிகளில் என் கண்களில் கண்ணீர் கசிந்தது.
’40 வருஷமா தியேட்டர் ஆப்பரேட்டரா இருக்கீங்க. எப்படி இந்த வேலைக்குள்ள வந்தீங்க?’னு கேட்டேன்.
அவர் சொன்னார், ‘எனக்கு சொந்த ஊர் இராமநாதபுரம். ஒரு 15 வயசு இருக்கும். என் வீட்டுப் பக்கத்துல ‘ராஜாராம்’னு ஒரு தியேட்டர் இருக்கும். அந்த தியேட்டர் ஓனருக்கு, ஆப்பரேட்டருக்கு சாப்பாடு, நைட் டிஃபன் எடுத்துட்டு போவேன். அப்போ ஆப்பரேட்டர் சாப்டுட்டு இருக்கும்போது, என்ன படத்தோட ரீல் மாத்த சொல்லுவார். அந்த ரூம்ல இருந்து படமும் பாத்துப்பேன்! அப்படி வந்த ஆர்வம் தான். இப்போ இங்க இருக்கேன் 40 வருஷமா!!
இந்த Photophone projector பத்தி சொல்லங்கனு கேட்டதுக்கு அந்த projector ஓப்பன் பண்ணி, அங்குலம் அங்குலமா சொன்னாரு. இனி என் வாழ்நாளில் இப்படி ஒரு ஃபிலிம் Projector ரூமிற்குள் செல்லும் வாய்ப்புக் கிடைக்குமா என ஒரு பயம் வேறு?இக்கணமே அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என முடிவு செய்து, ராமதாஸ் சொல்வதையெல்லாம் கூர்ந்து கவனித்தேன். என் கைகளால் Projectorஐ மெல்லத் தொட்டுப் பார்த்தேன்.
தரையில் ‘செங்கோட்டை’ படத்தின் ஃபிலிம் ரீல் பெட்டிகள் இருந்தது. மொத்தம் 14 ரீல் இருந்தது. அதில் கடைசி ரீலைத் திறந்துப் பார்த்து, ஃபிலிமை என் கையில் எடுத்து என்னக் காட்சி அதில் உள்ளது என வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தேன்.
பின் ராமதாஸிடம், ‘அண்ணே, அந்த ஓட்ட வழியா படம் பாத்துக்கவா??என்னோட கனவு அது’னு கேட்டேன். பாத்துக்கப்பானு சொன்னார். அந்த சுவற்றின் சிறிய ஓட்டையை நோக்கி மெல்ல, மெல்ல அடி எடுத்து வைத்தேன்!
‘இதுநாள் வரை திரையரங்கில் உட்கார்ந்து படம் பார்த்த நான்… திரைப்படத்தின் பிறப்பிடமான கருவறையில் இருந்து பார்த்தேன்! அந்தப் படத்தின் ஒளி மற்றும் ஒலியோடு ஒருசேர பயணித்து, அகண்ட வெள்ளித்திரையில் நானும் தெரியக் கண்டேன்!!’
மீண்டும் பேச்சுக் குடுத்தேன்.
’40 ரூபா பால்கனி டிக்கெட்டின் Seatகளைப் பார்த்தேன். தற்போது இருக்கும் தியேட்டர்களின் Seatன் தரத்தை match செய்கின்றது. எப்போ பண்ணீங்க இதெல்லாம்? இது பண்ணியும் ஏன் மக்கள் வரல?’
ராமதாஸின் பதில்,
‘தம்பி, இத பண்ணி ஏழு, எட்டு வருஷம் ஆச்சு. ஆனாலும் டிக்கெட் விலை 40 ரூபா தான். என்ன பிரயோஜனம்??மக்கள் வரலையே! சென்ட்ரல் தியேட்டர கண்டுக்கலையே!’
மற்றும் சில தகவல்கள்!
‘ஒரு படத்தைப் பத்து லட்சம் கொடுத்து வாங்குவோம். அந்தப் படம் அஞ்சு, ஆறு வாரம் ஓடி நாங்கப் போட்ட முதலத் தாண்டி லாபம் ஈட்டனும். அப்படி ஈட்டலேனா, எங்கக்கிட்ட இருக்க printஅ மத்தத் தியேட்டருக்குக் குடுத்து ஓட்ட சொல்வோம். அதுல வர லாபத்துல பாதி பாதியா பிரிச்சுப்போம்!!’
‘இந்தத் தியேட்டர் இன்னும் இயங்குறதுக்குக் காரணம் இதோட இட அமைப்பு. எப்பவும் மக்கள் வந்து போற இடம். வியாபார ரீதியா வரவங்க, கோயிலுக்கு வரவங்க, பர்ச்சேஸுக்கு வரவங்க தான் முக்காவாசி இங்க வருவாங்க. ஏனா அவங்களுக்கு வேலை முடிய நேரம் பிடிக்கும். அந்த நேரம் சும்மா இருக்காம, வெளியவும் சுத்தாம இருக்க இங்க வந்து படம் பாப்பாங்க!’
‘பழைய படங்கள் பாக்கனும்னு ஆசைப்படுறவங்க பலபேர் இருக்காங்க இன்னும். அதுல 90 சதவீதம் பேரு MGR, Sivaji ganesan ரசிகர்கள். இந்த இருவரின் படங்கள் போட்டால் இன்னும் கூட்டம் களைக்கட்டும்! காரணம், எங்கக்கிட்ட தான் ஃபிலிம் ரீல் படங்கள் ஓட்டக்கூடிய projector உள்ளது. பழைய படங்களின் stockஉம் உள்ளது.’ அதுமட்டுமில்லாது, இப்போ இந்தக் காலத்து Digital QUBE Technologyயும், அந்தக் காலத்து Film reel projectionஉம் ஒருசேர உள்ளது. காலத்தின் கட்டாயம், இந்த மாற்றத்தையும் ஏற்றுக் கொண்டோம்!’
கடைசியாக ராமதாஸ் அண்ணே சொன்னது,
“தம்பி, இப்போ இந்த ‘சிவகாமியின் செல்வன்’ படம் ஃபிலிம்ல ஓடல. Digitalஆ மாத்தி QUBEல தான் ஓடுது. எனக்கு என்ன வேலை இருக்கும்னு நினைக்குறீங்க?படம் ஆரம்பிக்குரப்போ ON பண்ணுவேன். படம் முடியுரப்போ OFF பண்ணுவேன். இடையில ஏதாவது பிரச்சனைனா எந்திரிப்பேன். சோம்பேறி ஆய்ட்டேன் பா!”
“ஆனா ஃபிலிம் படம்னா கதையே வேற! ஒரு படத்துக்கு 15,16 ரீல் இருக்கும். ரெண்டு projector machine. ஒரு ரீல் முடியப்போகுதுனு தெரிஞ்சா, அடுத்த மெஷின்ல, அடுத்த ரீல ரெடியா வெச்சிருக்கனும்!! மொத மெஷின off பண்ற டைமும், ரெண்டாவது மெஷின on பண்ற டைமும் ஒத்துப் போகனும்!! வர ரசிகர்களுக்கு தரமான படத்தக் குடுக்கனும்னு ஓடி ஓடி உழைப்பேன்! இதுல என் கஷ்டம் புரியாம Once more கேப்பாய்ங்க!!”
“நான் ஒரு படத்துல கூட நடிச்சிருக்கேன் தெரியுமா?? சுப்பிரமணியபுரம் படத்துல இந்தத் தியேட்டர தான் காட்டிருப்பாங்க. முரட்டுக்காளைப் படம் ஓடும். அந்த சீன் அப்போ, இதே ரூம்ல நின்னு நான்தான் ஃபிலிம் ரீல மாட்டுவேன்!என்ன நானே பாத்தேன் திரையில!”
நான் அண்ணனிடம், “உடம்பப் பாத்துக்கோங்க. மொத வீட்டுக்குப் போங்க. நல்லா சாப்பிடுங்க, பொங்கல் வாழ்த்துக்கள்.”னு சொல்லிவிட்டு விடைப்பெற்றேன். சென்ட்ரலை விட்டுப் பிரிய மனமில்லாமல் சென்றேன். மீண்டும் வருவேன். 100 ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்க வேண்டும். அதான் என் ஆசை!!
குறிப்பு: அந்தக்காலத்தில் 70 பைசா, 80 பைசா தான் டிக்கட்டின் விலை. மாடி என்றால் 1.25, 2.50.

